Wednesday 25 November 2015

மீண்டும் ஒலிக்க வேண்டிய கொகாலு

தமுஎகச விருதுபெற்ற நூல்கள் வரிசை: 9

தீர்க்கப்படாமல் இருந்த திருட்டு வழக்குகளில் “தேடப்பட்ட”
குற்றவாளிகளாக அடிக்கடி இவர்களின் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள், அது உள்ளூர்ச் செய்தியாகப் போய்விடும். அதிகாரத் திமிரோடு ஆட்டம் போடுகிறவர்களின் காம நெருப்பில் இவர்களின் பெண்கள் பொசுங்குவார்கள், அது உள்ளூர்ச் செய்தியாகக்கூட ஆகாமல் மறைக்கப்பட்டுவிடும். யார் இந்த “இவர்கள்”? முன்பு சமவெளிப் பகுதிகளிலிருந்து காடுசூழ் மலைப்பகுதிகளுக்கு விரட்டப்பட்ட, இப்போது அங்கிருந்தும் விரட்டப்படுகிற இருளர் மக்களே இவர்கள். இவர்களுக்காக இவர்களது மொழியிலேயே குரல் கொடுக்க வந்திருக்கிறது ‘சப்பெ கொலாலு’ என்ற இந்த நூல்.

கவிஞர் லட்சுமணன் ஏற்கெனவே இருளர் பேச்சு மொழியில் எழுதிய ‘ஒடியன்’ கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த நூல், இவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைச் சொல்கிறது. தகவல்களைக் கோர்த்தளிப்பதாக இல்லாமல், இவர்களின் பாரம்பரியப் பாடல்களைக் கேட்கவைக்கிறது. அப்பாடல்களுக்கு அருஞ்சொற்பொருள் தருகிறது. இதனால் நாமே அந்தப் பாடல்களினூடே பயணித்து இந்த மக்களைச் சென்றடைய முடிகிறது. புத்தகம் அத்தோடு நிற்கவில்லை, அந்தப் பாடல்களில் பொதிந்திருக்கும் கதைகளையும் கற்பனைகளையும் வெளிப்படுத்தி, உண்மையிலேயே வரலாற்றில் என்ன நடந்திருக்கும் என்ற அறிவியல்பூர்வ தேடலை மேற்கொள்கிறது. ஆய்வும், படைப்பாக்கமும் இணைந்த மாறுபட்டதொரு அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

“சப்பெ” என்றால் வாய்பேச இயலாத பெண். “கொகாலு” என்றால் முகவீணை அல்லது சின்னஞ்சிறு நாதசுரம் போன்ற இசைக்கருவி. வாய் பேச முடியாத சப்பெ உணர்வுகளைத் தேக்கி அந்தக் கொகாலுவை வாயில் வைத்து வாசித்தாளானால், இவர்களை விரட்ட வந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய ஆண் மறுநாள் செத்துப்போவான், அவர்கள் வளைத்துப்போட்ட நிலத்தில் வளர்ந்திருக்கும் பயிர்களை யானைக்கூட்டம் அழித்துவிடும்! இப்படியான பாமர நம்பிக்கைகளோடு இவர்கள் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்க, ஆக்கிரமிப்பாளர்களின் கட்டளைப்படி அந்த சப்பெ பலியிடப்படுகிறாள். அவளிடமிருந்து பறிக்கப்பட்ட கொகாலு கூரையில் வீசப்படுகிறது.

புத்தகம் நெடுகிலும் இப்படியான ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்ட வலிகள்  நெறிகட்டிப்போயிருப்பதைக் காண முடிகிறது. ஆதார ஆவணங்கள் இல்லாத நிலையில் அந்தப் பாடல்களும் வாய்மொழிக் கதைகளுமே இவர்களுக்கான அடையாளச் சங்கிலிகள். காலப்போக்கில் அந்தச் சங்கிலிகள் தேய்ந்து அறுந்து காணாமலே போய்விடக்கூடிய அபாயம் நேர்வதற்குள் எழுத்தில் பதிவு செய்திருப்பது ஒரு அருந்தொண்டு.

கொங்கு என்ற சொல்லுக்கு இருளர் மொழியில் கிழக்கு என்று பொருள். கொங்கர் என்றால் கிழக்கேயிருந்து வந்தவர்கள். குறிப்பிட்ட பிரிவினரையல்லாமல், வனத்திற்குள் கிழக்கிலிருந்து வந்தவர்கள் அல்லது கிழக்குத் திசை வழியாக வந்தவர்கள் எல்லோருமே இவர்களைப் பொறுத்தவரையில் கொங்கர்கள்தான். கானக உணவை மட்டுமே அறிந்தவர்களுக்கு, இட்லி கூட அரண்மனை உணவுதான். அந்த இட்லியையும் பிற பொருள்களையும் கொடுத்து இவர்களை மயக்கியிருக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். அதற்கெல்லாம் அசராதவர்களை வஞ்சகங்களாலும் வன்முறைகளாலும் அடக்கியிருக்கிறார்கள். இப்படி மயக்கியதற்கும் அடக்கியதற்கும் இரண்டு நோக்கங்கள்: ஒன்று, விலைமதிப்பில்லா மரங்களை வெட்டிக் கடத்துவது; இரண்டு, விலையேதும் தராமல் நிலங்களை வளைத்துப்போடுவது.

ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது இவர்களது இயற்கை உடைமைகள் மட்டுமல்ல, பண்பாட்டு அடையாளங்களும்தான். இயற்கை இவர்களது நேசத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியதாக இருந்துள்ளது. காட்டில் முதன் முதலில் தடம் பதித்து வாழ வழியேற்படுத்தியவர்களை சாமியாகப் போற்றிக் கதை புணைந்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். இவர்கள் ஒடுக்கப்பட்டதன் அடையாளமாகப் பின்னர் சிலை வடிவத் தெய்வங்களும், ஆதிக்க சமூக பூசைச் சடங்குகளும் புகுத்தப்படுகின்றன. “வானளவு எழுந்த பெருமாள்” பால் கேட்டபோது தயங்கிய காரையன் முதுகில் பிரம்படி விழுந்த கதையின் உள்ளடக்கம் இதுதான். “இந்தச் சாமியையெல்லாம் முந்தி சீந்த மாட்டாங்க்,” என்று ஒரு மூப்பன் சொல்வதிலிருந்து புலப்படுவதும் இதுவேதான்.

கதைப்பாடல்களில் எதிரொலிப்பது வேதனைகள் மட்டுமல்ல; அவ்வப்போது நிலைநாட்டப்பட்ட வெற்றிகளும்தான். அடிமைப்படுத்த முயன்றவர்களை மீறி, நிலத்தில் சாகுபடி செய்ய முன்னத்தி ஏராக மாறிய வள்ளியின்  வெற்றி அப்படிப்பட்ட ஒன்றுதான். விரட்ட வந்தவர்களை விரட்டியடித்த போராட்டங்களில் இவர்களுக்கு வன விலங்குகளும் அல்லவா துணையாக நின்றிருக்கின்றன! அந்தக் கதைகளில்தான் எத்தனை நையாண்டி! எத்தனை எள்ளல்!

இவர்களும் மலை வனத்திற்குள் சமவெளியிலிருந்து ஏறி வந்தவர்கள்தான், மற்றவர்களும் அப்படி வந்தவர்கள்தான். வேறுபாடு என்னவென்றால், இருளர்கள் இயற்கையோடு இணைந்து வாழத் தொடங்கினார்கள். மற்றவர்களோ இயற்கையைச் சுரண்டவே வந்தார்கள். இன்று கொங்கர்கள் மட்டுமல்ல, மேற்குலக கார்ப்பரேட் கடவுள்களுமல்லவா வளைத்துப்போட வருகிறார்கள்! அன்று இட்லி ஆசை காட்டப்பட்டதென்றால், இன்று கைப்பேசி உள்ளிட்ட நவீனப் பொருள்களின் வலை! வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போக வைத்து, நிலம் கைப்பற்றல் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் அரசின் வளர்ச்சி மந்திரங்களில் மறைந்திருப்பது இவர்களை இங்கிருந்தும் விரட்டுகிற தந்திரங்களுமல்லவா!

அச்சமறியாத இந்த மக்கள் நடுங்குவது பீ-ஒடியன் பற்றிய நினைப்பில்தான். இவர்களை அழிக்கவந்த தீய சக்தியாக அதனைக் கருதுகிறார்கள். விசாரித்தால் தொடக்கத்தில் இவர்களது முன்னோர்களை வதைத்த கொடுமைக்காரர்களின் கதைகள் கிடைக்கக்கூடும்.

ஒரு சமுதாயம் உண்மையிலேயே நாகரிகத்துடன் இருப்பதாக எப்போது சொல்ல முடியும் என்றால், மிகக்குறுகிய எண்ணிக்கை கொண்டவர்களின் உரிமைகளும் அடையாளங்களும் சமத்துவத்தோடு மதிக்கப்படுகிறபோதுதான். இருளர் சமூகத்தை இருட்டில் தள்ளத் துடிக்கும் நவீன பீ-ஒடியன்கள் வீழ்த்தப்பட வேண்டும். கூரையில் வீசப்பட்ட கொகாலு மீண்டும் கையில் எடுக்கப்பட வேண்டும், சப்பெ என அடக்கப்பட்டவர்களின் உரிமை முழக்கமாக உரக்க எழுந்து சக மனிதர்களை அணிதிரட்ட வேண்டும்.

(‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,’ வெளியிட்டுள்ள, லட்சுமணன் எழுதிய ‘சப்பெ கொலாலு’ என்ற இந்த நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2014ம் ஆண்டுக்கான விளிம்பு நிலை மக்களுக்கான எழுத்தாக்கத்திற்கான விருதினை வழங்கியுள்ளது.)

விருது வழங்கல் விழா தஞ்சையில் நடைபெற்றபோது இப்புத்தகம் தேர்வு செய்யப்பட்டது குறித்து நான் உரையாற்றினேன். அதன் அடிப்பiடையில் எனது இந்தக் கட்டுரை  ‘தீக்கதிர்’ (நவம்பர் 23, 2015 இதழ்) நாளேட்டின் ‘இலக்கியச் சோலை’ பக்கத்தில் வெளியாகியுள்ளது.

Sunday 8 November 2015

வெள்ளத்திற்கு மேலே தலை தூக்குவோம்

மும்பையைச் சேர்ந்த உருது மொழி எழுத்தாளர் ரஹ்மான் அப்பாஸ் . நாடு முழுவதும் சகிப்பின்மை ஊட்டப்படுவதற்கும் கருத்துரிமை தாக்கப்படுவதற்கும் தங்களது எதிர்ப்பின் அடையாளமாக சாகித்ய அகடமி விருதைத் திருப்பிக்கொடுத்த படைப்பாளிகளில் ஒருவர். தனது முதல் நாவலுக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். பண்பாட்டுத் தளத்தில் அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு எதிரான விரிந்த மேடையாகிய ‘சரிநிகர்’ அமைப்பின் சார்பில் அக்.29 அன்று சென்னையில் நடைபெற்ற சென்னைப் பிரகடன வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் ‘தீக்கதிர்’ நாளேட்டின் ‘வண்ணக்கதிர்’ இணைப்பிதழுக்கு (நவம்பர் 8 - 2015) அளித்த சிறப்பு நேர்காணல் இது. தீக்கதிர்-வண்ணக்கதிர் சார்பில் சந்திப்பு: ச. தமிழ்ச்செல்வன், அ. குமரேசன்,
உங்களது தொடக்க வாழ்வு, இலக்கிய உலகத்திற்குள் நீங்கள் ஈர்க்கப்பட்ட பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...
மஹாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் நான் பிறந்தேன். என் தந்தை மும்பையில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் எனக்கு நான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது எங்கள் குடும்பம் அங்கே சென்று குடியேறியது. பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு எல்லாமும் மும்பையில்தான். உருது இலக்கியத்திலும் பின்னர் ஆங்கில இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். பள்ளி மாணவனாக உரக்க வாசிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது, இலக்கிய வாசிப்பை நான் மிகவும் நேசிக்கத் தொடங்கினேன். இலக்கியம் வாசிக்க வாசிக்க, அதன் வழியாக மனித நேயக் கண்ணோட்டம், மதக் கண்ணோட்டத்தைவிட, வேறு எதையும் விட மகத்தாது என்ற புரிதல் ஏற்பட்டது.
நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோதுதான் 1992ம் ஆண்டின் வன்முறைகளும், 1993ம் ஆண்டின் குண்டுவெடிப்புகளும் மும்பையைக் குலுக்கின. அதைத் தொடர்ந்து ஒரு முஸ்லிம்களிடையே தங்களுடைய அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது பற்றிய அச்சம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் தொப்பியும் தாடியும் வைத்துக்கொண்டு நடமாடுகிறவர்களை அச்சத்தோடு பார்க்கிற சூழலும் ஏற்பட்டது. முஸ்லிம் இளைஞர்களிடையே இது தொடர்பாக ஏற்பட்ட மன ஓட்டங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எனது முதல் நாவலை எழுதினேன். ஒரு பக்கம் அதற்கு விரிவான வரவேற்பும் இருந்தது, முஸ்லிம் சமூகத்தில் ஒரு பகுதியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. அந்த எதிர்ப்பு எனக்கு ஒரு எழுத்தாளரின் இடம் எது, சந்திக்கும் சவால்கள் என்ன என்ற தெளிவை ஏற்படுத்தியது. இலக்கியப் படைப்பின் அழகியல் என்பது மனித நேயத்திற்கான அழகியலாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். அதன் பிறகு, மதத்திற்கோ வேறு எதற்குமே அஞ்சாமல் எழுதுவது என்ற உறுதியை வளர்த்துக்கொண்டேன்.
அழகியலைப் பொறுத்தவரையில் மதவாதிகளுக்கும் கலை-இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இடையே எப்போதுமே ஒரு முரண் இருந்துவந்திருக்கிறது. மதவாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மத வாதம் சார்ந்த அழகியலைத்தான் வலியுறுத்துகிறார்கள். எழுத்தாளர்களோ மனித நேயம் சார்ந்த அழகியலை உயர்த்திப்பிடிக்கிறார்கள். ஒரு எழுத்தாளராக எனது பங்கு என்ன என்பது எனக்குத் தெரிகிறது. மதவாதிகள் பற்றிய அச்சமின்றி, எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினரின் ஏற்புக்காக அல்லாமல், வெவ்வேறு பிரிவுகளையும், வெவ்வேறு மொழிகளையும் சார்ந்த வாசகர்களுக்காக எழுதுவது என்ற உறுதியான முடிவெடுத்தேன்.
சாகித்ய அகடமி விருதைத் திருப்பிக்கொடுக்க உங்களைத் தூண்டியது எது?
பல காரணிகள் இருக்கின்றன. முதலாவதாக, நாடு முழுவதும் பகைமை நெருப்பு பற்றவைக்கப்படுகிறபோது, மத நம்பிக்கையின் பெயரால் அராஜகங்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்படுகிறபோது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருக்கிற பிரதமர். தனது சொந்த மாநிலத்தில் அந்தப் பகைமை அரசியல் வளர்க்கப்பட்ட வரலாற்றுக் கறையோடு வந்தவர்தான் அவர். இரண்டாவதாக, மக்களின் மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. உணவு உரிமை கூட சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை மக்களை நிறுத்துவதற்கான அரசியலாக்கப்படுகிறது. மூன்றாவதாக, சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் தங்களது மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதற்கான உரிமையும் சுதந்திரமும் ஒடுக்கப்படுகின்றன. கல்புர்கி கொலையின் உள்ளர்த்தம், சிந்தனைக்கு எதிரான வன்கொடுமைதான்.
இந்தப் பின்னணியில்தான் சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக கல்புர்கியின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விருதைத் திருப்பிக்கொடுப்பதாக அறிவித்தார்கள். அனைத்து எழுத்தாளர்களுக்குமான சாகித்ய அகடமி மௌமனாக இருப்பதைக் கண்டித்தும், திட்டவட்டமாக, மத்திய அரசைக் கட்டாயப்படுத்துகிற வகையில் அகடமி செயல்பட வலியுறுத்தியும் இவ்வாறு விருதைத் திருப்பிக்கொடுக்க முன்வந்தார்கள். நானும் இந்த முடிவை எடுத்தேன். இது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பானதல்ல; அண்மைக்காலமாக நாடு முழுவதுமே திட்டமிட்ட வகையில், பல்வேறு அமைப்புகள் மூலமாக, பல்வேறு வடிவங்களில் நடத்தப்படுகிற பண்பாட்டுத் தாக்குதல்கள், கருத்துரிமை அடக்குமுறைகள், மக்கள் நல்லிணக்க வாழ்வைச் சீர்குலைக்கும் செயல்கள் அதிகரித்து வருவதற்கு எதிரான வெளிப்பாடுதான் இது. இந்த எதிர்ப்பு இந்த வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன், தாக்குதல்கள் பல வடிவங்களில் இருப்பது போல எதிர்ப்புகளும் பல வடிவங்களில் இருக்கலாம். தமிழகத்திலும் சில எழுத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது உட்பட, நாட்டின் பல பகுதிகளிலும் பல தரப்புகளையும் சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
2004ல் வெளிவந்த உங்களுடைய முதல் நாவல் ‘நகாலிஸ்தான் கி தலாஷ்’ - ‘பாலைவனச் சோலையைத் தேடி’- நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். எந்தப் புகாரின் அடிப்படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? அப்போது உங்களுடைய உணர்வு எப்படி இருந்தது? அந்த நாவல் ஒரு வகையில் உங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?
அந்த நாவல் காதலைப் பேசுகிறது, காதலுக்காகப் பேசுகிறது. அதுதான் நடவடிக்கைக்குக் காரணம்! அந்த நாவலை எதிர்த்தவர்கள் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
உருது பேசுகிற பிரிவினரில் பலர் அந்த மொழி இலக்கியத்தைத் தாண்டி நவீன இலக்கியத்தின் பக்கமே வராதவர்களாக இருக்கிறார்கள். மதம் சார்ந்த உருது இலக்கியத்தில் காதலுக்கு இடமில்லை. காதல் வயப்பட்ட ஒரு ஆண் தனது காதலியைப் பற்றிய கற்பனையோடு வெளிப்படுத்தும் உணர்வுகள், அதே போல் காதல் வயப்பட்ட ஒரு பெண் தன் காதலனைப் பற்றி யோசிக்கிறபோது சித்தரிக்கும் உணர்வுகள் மற்ற மொழி இலக்கியங்களில் பரவலாக இருக்கின்றன. அந்த வாடையே அறியாத சிலர், அந்தச் சித்தரிப்புகளை ஆபாசம் என்றும், மார்க்கத்திற்கு எதிரானது என்றும் தாக்கினார்கள். அதையே புகாராகவும் பதிவு செய்தார்கள். நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.
எனக்கு ஏற்பட்ட உணர்வு - எந்த மதமானாலும் காதலை அங்கீகரிக்க மறுக்கிறதே என்பதுதான். பல்வேறு ஆர்எஸ்எஸ் குடையின் கீழ் ராம் சேனா போன்ற இந்து மதவாத அமைப்புகள், காதலை எதிர்க்கின்றன. காதலர்களாகத் தெருவில் செல்ல அனுமதிப்பதில்லை. காதல், பாலியல் பிரச்சனைகள் போன்ற கருப்பொருள்களை ஆபாசம் என்றும், ஒரு பகுதி மக்களைப் புண்படுத்துகின்றன என்றும் கூறுகின்றன. பாலியல் உணர்வுகள் இயற்கையானவை, அதை வெளிப்படுத்துவதும் இயற்கையானது, இலக்கியத்தில் அதைச் சித்தரிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதை ஏற்க மறுக்கின்றன. அதே போன்றுதான் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களும் காதலை ஏற்க மறுத்து, காதல் உணர்வுகளை ஆபாசம் என்று தாக்குகின்றன. அடிப்படையில், மதம், சாதி என்ற வேலிகளை உடைக்கக் கூடியது காதல்... அதுதான் அவர்களது ஆத்திரத்திற்குக் காரணம். இதில் மத வேறுபாடே இல்லை!
என்னைப் பொறுத்தவரையில் அந்த நடவடிக்கைக்குப் பிறகு எனது கண்ணோட்டங்கள் மேலும் உறுதிப்பட்டன. 2009ல் ‘மாம்னுவா முஹபத் கி கஹானி’ (தடைசெய்யப்பட்ட காதலின் கதை), 2011ல் ‘குதா கே சாயே மேய்ன் ஆங்க் மிச்சோலி’ (கடவுளின் பெயரால் கண்ணாமூச்சி ஆட்டம்) ஆகிய நாவல்களை எழுதினேன்.
சிறுவயதில் நான், சில இஸ்லாமிய மதவாத இளைஞர் அமைப்புகளின பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். முஸ்லிம் மார்க்கம், முஸ்லிம் சகோதரத்துவம் என்ற பெயர்களில் அநதப் பிரச்சாரங்கள் நடந்தன. காஷ்மீர் பிரச்சனையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. மத அடையாளங்களைக் காக்கிற லட்சியமே உயர்வானது என்று நம்பியிருந்தேன். அது போலியான அடையாளம் எனபதும் அவர்களுடைய உண்மையான செயல்திட்டம் அப்போது எனக்குத் தெரியவில்லை. இந்து நாடு என்பது போலவே இஸ்லாமிய நாடு என்ற நோக்கம் கூட சில அமைப்புகளுக்கு இருந்தது. பின்னர், ஏற்கெனவே சொன்னது போல, நல்ல இலக்கியப் படைப்புகளைப் படிக்கப்படிக்க எனது சிந்தனைகள் மாறின. பிரேம்சந்த், மாக்சிம் கார்க்கி, செகாவ், மன்ட்டோ உள்பட பலரது எழுத்தாக்கங்களைப் படித்தேன். அந்த எழுத்துகள்தான் எனக்கு, மதத்தை விடவும் மனிதம் உயர்வானது என்று எனக்கு உணர்த்தின. அன்புக்காக, அமைதிக்காக, நல்லிணக்கத்திற்காக, நட்புறவுகளுக்காக, ஒற்றுமைக்காகப் பாடுபடுவதே இலக்கியம். ஆக, பிற்போக்குச் சிந்தனைகளின் அழுக்கான ஆழத்தில் புதைந்துவிடாமல் என்னைக் காப்பாற்றியது இலக்கியம்தான்.
அதிலிருந்து விடுபட்டபிறகு, இந்து மதவாத அமைப்புகளுக்கும் முஸ்லிம் மதவாத அமைப்புகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும் புரிந்துகொண்டேன். மதம் என்ற அடிப்படையில் மனித உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் தடைபோடுவதில் இந்த இரு பிரிவினரும் சகோதர சகோதரிகளாகத்தான் இருக்கிறார்கள். மதவெறி அமைப்புகள்எல்லாமே பண்பாட்டுப் பன்முகத்தன்மையை ஏற்பதில்லை, கலைகளை ஏற்பதில்லை, காதலை ஏற்பதில்லை, இலக்கியத்தின் மூலம் மதம் விமர்சிக்கப்படுவதை ஏற்பதில்லை... ஆகவே இவர்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர்கள்.
தொலைக்காட்சி விவாதங்களிலும் பொது நிகழ்வுகளிலும் மாற்றுச் சிந்தனைகளுக்காகவும் கருத்துரிமைக்காகவும் பண்பாட்டுப் பன்மைத்துவத்துக்காகவும் வாதிடக்கூடிய கம்யூனிஸ்ட்டுகள், பகுத்தறிவாளர்கள், இதர முற்போக்காளர்கள் இந்து மதத்தைத்தான் விமர்சிக்கிறார்கள், முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ மதவாதம் பற்றி எதுவும் சொல்வதில்லை என்று இந்துத்துவவாதிகள் குற்றம் சாட்டுவதுண்டு. மேலோட்டமாகப் பார்க்கிற எளிய இந்து மக்கள் இந்தக் குற்றச்சாட்டு நியாயம்தான் என்று நினைக்கும் வகையில் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுவார்கள். உங்கள் கருத்து என்ன?
முஸ்லிம், கிறிஸ்துவ மதவாத சக்திகள் இங்கே செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்களையும் விமர்சிக்கத்தான் வேண்டும். அவ்வாறு விமர்சிப்பது நடக்கத்தான் செய்கிறத.
ஆனால், அவர்கள் சமுதாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இங்கே இல்லை. பெரிய அச்சுறுத்தல் என்பது பெரும்பான்மை மதவாத அமைப்புகளிடமிருந்துதான் வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரான அமைப்புகள்தான் அவை. இந்து மதத்தின் பன்முகத் தன்மைக்கே இந்த அமைப்புகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்து மதத்திற்குள் உள்ள மாறுபட்ட சமூகங்களின் மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்கும் அவர்களால் ஆபத்துதான். ஆகவே இங்கேயுள்ள முற்போக்காளர்களும் ஜனநாயக சக்திகளும் இந்துமதவாத அமைப்புகளின் வெறித்தனமான செயல்களைக் கூடுதலாகக் கண்டித்தாக வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய நாடுகளில் இருக்கிற கம்யூனிஸ்ட்டுகளும் ஜனநாயக சக்திகளும் அந்த நாடுகளின் பெரும்பான்மை மதவாதிகளாகிய முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் சீர்திருத்தங்களுக்காகவும் போராடுகிறார்கள். கிறிஸ்துவ நாடுகளில் முற்போக்காளர்கள் கிறிஸ்துவ மதவெறி அமைப்புகளைக் கண்டித்துக் குரல் கொடுக்கிறார்கள். வேறு எந்த மதம் ஆளுமை செலுத்துகிற நாடானாலும் அங்கேயும், அந்த மதம் சார்ந்த வெறிச்செயல்களை, அங்கே மனிதஉரிமைகளுக்காகப் போராபடுகிறவர்கள் எதிர்கத்தான் செய்கிறார்கள். அதே போல் இந்தியாவில் இந்து மதத்தின் பெயரால் கிளப்பிவிடப்படும் பாகுபாடுகளுக்கு இங்குள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது இயல்பானதுதான்.
எந்தவொரு சமூக சீர்திருத்த இயக்கமும் அந்தந்த சமூகத்திற்கு உள்ளிருந்தே வருகிறபோதுதான் வலுப்பெற முடியும், வெற்றி பெறவும் முடியும். இஸ்லாம் சமயத்திற்குள் அப்படிப்பட்ட சீர்திருத்தக்குரல்கள் எந்த அளவுக்கு ஒலிக்கின்றன?
கெடுவாய்ப்பாக அப்படிப்பட்ட குரல்கள் சன்னமாகவே ஒலிக்கின்றன. சீர்திருத்தங்களுக்கான தேவைகள் இருக்கின்றன என்ற போதிலும், அதற்கான முயற்சிகளுக்கு ஊக்கம் கிடைப்பதில்லை. மாறாக, பழமைவாதங்களை நியாயப்படுத்தி, அவற்றைக் கெட்டிப்படுத்துவதில்தான் பலரும் இறங்குகிறார்கள். இளைஞர்களும் அந்த வாதங்களால் கவரப்படுகிறார்கள் என்பது இன்னொரு கெடுவாய்ப்பு. அதன் பின்னணியில் மதத்தலைவர்கள், போதகர்களின் பழமைவாதக் கண்ணோட்டங்கள் மட்டுமல்ல.
மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு பெயர்களில் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளின் கைகள் மேலோங்கியிருப்பதைப் பார்க்கிறோம். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் அந்த சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்க அரசும் பல ஐரோப்பிய அரசுகளும் இராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் அத்துமீறிச் செயல்பட்டதற்கும், லட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்ததற்கும் எதிராகக் கிளம்பிய பல அமைப்புகள், மனித உரிமைகளுக்காகவோ சமத்துவத்திற்காகவோ ஜனநாயகத்திற்காகவோ போராடாமல் மதவாதத்தை நிலைநாட்டவே முயல்கின்றன. எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள மதமே வழி என்று போதிக்கின்றன. அதை நிலைநாட்ட ஜனநாயகத்தை ஒடுக்கவும் துணிகின்றன. ஐஎஸ், முஸ்லிம் சகோதரத்துவம், தாலிபான் என்று பல இயக்கங்கள் இப்படித்தான்...
அந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவருகிறவர்களும், இங்கிருந்து அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்கிறவர்களும் அதே போன்ற கருத்தாக்கங்களை இங்கே பின்பற்றுகிறார்கள். அவர்களோடு உரையாடல் நடத்த வேண்டியுள்ளது. மேற்கத்திய ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ள மதவாத அணுகுமுறை தேவையில்லை, மத்திய கிழக்கு நாடுகளில் கையாளப்படும் அணுகுமுறைகள் இங்கே பொருந்தாது என்று எடுத்துரைக்க வேண்டியுள்ளது. சீர்திருத்தங்களுக்கான முயற்சிகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூக சீர்திருத்தம் என்று வருகிறபோது நாம் பெண்ணுரிமை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்களுடன் விவாதிக்கிறபோது, இஸ்லாம் மார்க்கத்தில் பெண்களுக்கு முழு உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்து மதத்தில் பெண் கடவுள்களே கூட இருப்பதாக இந்துமதத்திற்காக வாதிடுவோர் கூறுவது போன்று இவர்களும், இஸ்லாம் சமயத்தில் பெண்களுக்கு சமத்துவம் இருக்கிறது என்கிறார்கள். உண்மை என்ன?
பிரச்சனை இஸ்லாம் நெறிகளில் இல்லை, அவற்றை விளக்கியவர்களிடம்தான் இருக்கிறது. நபிகள் நாயகம் சொன்ன இஸ்லாமிய நெறிகளில் உண்மையிலேயே பெண்களுக்கு சமத்துவமும், முழு உரிமைகளும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கு விளக்கம் அளித்த முல்லாக்களும் மற்றவர்களும் தவறான கருத்துகளைக் கூறி பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கெட்டிப்படுத்திவிட்டார்கள். பெண்களின் சுதந்திரத்தை முடக்கிவிட்டார்கள். இந்தியாவில், முஸ்லிம் பெண்கள் பொதுவெளிக்கு வருவதும் பங்கேற்பதும் நடக்கிறது என்றாலும் ஒப்பீட்டளவில் மிகக்குறைவுதான். அடிப்படையான பெண்ணுரிமைகள் மறுக்கப்படுகின்றன, வெளியேயிருந்து வரும் தாக்குதல்களைக் காரணம் காட்டி அந்த உரிமைகள் மேலும் முடக்கப்படுகின்றன.
இதற்கு எதிரான போராட்டத்தில், அடிப்படையான நெறிகள் வலுவாக முன்வைக்கலாம். முரண்பட்டு மோதிக்கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை நடத்துவது, கேள்விகள் கேட்பது என்று பாலின சமத்துவக் கருத்துகளை வலியுறுத்தலாம்.
எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் அறிவியலாளர்கள் கலைத்துறையினர் உள்ளிட்ட பலரும் தங்களுடைய விருதுகளைத் திருப்பிக்கொடுப்பதாக அறிவித்தார்கள். அதன் தாக்கம் என்ன?
இன்று நீங்களும் நானும் சகிப்புத்தன்மை பற்றி விவாதிக்கிறோமே அதுவே ஒரு தாக்கம்தான். நாடு முழுவதும் சகிப்பின்மை பற்றிய வாத-எதிர்வாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் ஆட்சியாளர்களும் மதவாத சக்திகளும் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமே இந்தியாவில் என்ன நடக்கிறது என்று திரும்பிப்பார்க்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒதுங்கியிருந்தவர்கள், பொதுமக்களின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்கள் தொடங்கிவைத்த செயல் நாடு தழுவிய விவாதப்பொருளாகியிருக்கிறது. இதெல்லாம் முக்கியமான தாக்கங்கள்.
இந்தியா அடிப்படையில் விவாதங்களில் நம்பிக்கை உள்ள நாடுதான். தொன்மைக்காலத்திலிருந்து சமயம், சமூகம், அரசியல் என்று நெடும் விவாதங்கள் நடந்த வரலாறுகள் இருக்கின்றன. அந்த விவாத மரபும், உரிமையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை அனுமதிக்கலாமா என்ற கேள்வி சமுதாய வெளியில் நிச்சயமாகப் பரவும். அந்த மரபையும் உரிமையையும் மக்கள் உறுதியாகப் பாதுகாப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்டோர் விருதுகளைத் திருப்பிக் கொடுக்க முன்வந்தார்கள். சக படைப்பாளிகள் கருத்துரிமைக்காக ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழக எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதைத் தொடர்ந்து உருது எழுத்தாளர்களும் அதே போன்ற வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார்கள். இந்தச் செயல்களில் உள்ள செய்தி இதுதான்: பிரதமர் அவர்களே, நாங்கள் உங்களை எதிர்த்து இதைச் செய்யவில்லை, நாடு முழுவதும் பரப்பப்படுகிற பகைமை அரசியலை எதிர்க்கிறோம்.
இந்த முயற்சிகளுக்குப் பிறகு சாகித்ய அகடமியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. அதுவே தாமதம்தான் என்றாலும், எழுத்தாளர்களது இயக்கத்தால்தான் அந்தக் கூட்டம் நடந்தது. எழுத்தாளர்களின் இயக்கம் என்றே அதைச் சொல்லலாம். அதே வேளையில், இந்தச் செயல்களின் இலக்கு சாகித்ய அகடமியின் மௌனத்தைக் கலைப்பது மட்டுமல்ல. மத்திய அரசின் மௌனத்தை உடைக்க வேண்டும் என்பதும்தான். ஆளுங்கட்சியினர் பல வகைகளில் பகைமைக் கருத்துகளைப் பேசுகிறார்கள், அவர்களுடைய கூட்டாளிக் கட்சியொன்று பாகிஸ்தான் பாடகர் நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது... மாட்டுக்கறி வைத்திருந்தாக வதந்தி பரப்பப்பட்டு வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது... இதிலெல்லாம் அரசின் நிலைபாடு என்ன என்று கேட்பதுதான் இந்தச் செயல்களின் நோக்கம். இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க ஆளுங்கட்சியினர் முயன்றதையும் மீறி மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
அரசு திட்டவட்டமாக மதவெறிப் பிரச்சாரங்களுக்கும், பயங்கரத் தாக்குதல்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கிறது என்று தெரியவருகிறபோது, மூத்த எழுத்தாளர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்பார்கள். அது வரையில், சாகித்ய அகடமி தீர்மானத்தை ஏற்று விருதுகளை மீண்டும் ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது அரசியல் தூண்டுதலால்தான் என்று ஆளுங்கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்ததன் மூலம் தேசத்தை அவமதித்துவிட்டதாக மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் இருவரும் கூறியிருக்கிறார்கள்...
விருதுகளைத் திருப்பிக் கொடுத்தவர்களின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்றெல்லாம் சொல்வதன் மூலம் இந்த எதிர்ப்பைக் கொச்சைப்படுத்த முயல்கிறார்கள். பிரச்சனைகளைத் திசை திருப்புவதில் வல்லவர் அருண் ஜேட்லி. ஆனால் இந்த முறை அது நடக்காது. ஏனென்றால் எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், திரைக்கலைஞர்கள், ஒரு முன்னாள் கப்பற்படை அதிகாரி ஆகியோர் விருதுகளைத் திருப்பியளித்தது இந்த தேசத்தை எதிர்த்து அல்ல. பகைமைப் பேச்சுகளையும், மதவெளித் தாக்குதல்களையும், பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் இந்த அரசு தடுக்கத் தவறிவிட்டதை எதிர்த்துதான். மக்கள் உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். முன்பு காங்கிரஸ் அரசு செய்தது போலவே நீங்களும் பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள் என்று வலியுறுத்துவதுதான் நோக்கம்.
இசைக்கலைஞர் ஏ.ஆர். ரகுமான் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்கு இசையமைத்தார் என்பதற்காக மும்பையைச் சேர்ந்த ரஜா அகடமி என்ற முஸ்லிம் அமைப்பு அவருக்கு எதிராக ஃபட்வா அறிவித்தது பற்றி...
ராம் சேனா போல இந்த ரஜா அகடமியும் ஒரு சிறிய அமைப்புதான், ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற அமைப்பு அல்ல. அதன் ஃபட்வா அறிவிப்பை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏற்கெனவே டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடை பற்றி விமர்சித்து அவருக்கு எதிராகவும் ஃபட்வா அறிவித்த அமைப்புதான் அது.
கடந்த பல ஆண்டுகளாக மதச்சார்பின்மை மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதில் ஏற்பட்ட தோல்வியின் விளைவாகத்தான் இப்படிப்பட்ட கும்பல்களின் செயல்பாடுகளைப் பார்க்கிறேன். அரசுகளின் சமரசம், திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கத் தவறியது போன்ற பலவீனங்களால்தான் இப்படிப்பட்ட குழுக்கள் தங்களை முன்னிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.
பொதுவாகவே இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் மக்களின் ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும் பயன்படுத்திக்கொண்டு மதவாத சக்திகள் உள்ளிட்ட வலதுசாரி சக்திகள் செல்வாக்குப் பெற்றிறிருக்கின்றன. இந்தப் போக்கிற்கு என்ன காரணம்?
உண்மைதான். இது திடீர் நிகழ்ச்சிப்போக்கு அல்ல. அன்றைய சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய அரசுகளுக்கும் இடையயான சித்தாந்தப் போர் இதன் பின்னணியில் இருக்கிறது. சோவியத் யூனியனுக்கு எதிராக, பல நாடுகளில், அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களையே வைத்து ஒரு ஏவல் போர் நடத்தியது அமெரிக்க அரசு. சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு, அந்த ஏவல் படைகள் மதத்தையும் கலாச்சாரத்தையும் பயன்படுத்தி அரசியல் சக்திகளாக உருவெடுத்தன. சில அமைப்புகள் அமெரிக்காவுக்கு எதிராகவும் மாறின. இத்தகைய பின்னணியில்தான் பல நாடுகளிலும் அப்பட்டமான இஸ்லாமிய இயக்கங்கள் உள்ளிட்ட மதவாத அமைப்புகள் ஆளுமை செலுத்துகின்றன. மிக விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாறு இது.
இந்தப் போக்கின் இந்தியப் பதிப்பாக, இந்து மதவாத அரசியல் முன்னுக்கு வந்திருப்பதைப் பார்க்கலாம். மதங்கள் வேறு என்றாலும், மக்களின் அடிப்படை உரிமைகளை, கருத்துச் சுதந்திரத்தை, மதச்சார்பற்ற மாண்புகளை, ஜனநாயகத்தைத் தாக்குவதில் இவர்கள் எல்லோருமே ஒரே வார்ப்புகள்தான்.
இதை கலை இலக்கியக் களத்தில் எப்படி எதிர்கொள்வது? எழுத்தாளர்கள் கலைஞர்களின் பங்கு என்ன?
கலை இலக்கியக் களத்தில்தான் முதல் முன்முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுகிலும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்பியதில் கலையும் இலக்கியமும் முன்னணிப்பங்கு வகித்து வந்திருப்பதைப் பார்க்க முடியும். அந்தப் போராட்டம் உடனடியாக, ஒரே முயற்சியில் வெற்றிபெற்றதில்லைதான். ஆனால், படிப்படியாக மாற்றங்களை நிலைநாட்ட முடிந்திருக்கிறது. இன்றும் தீண்டாமை இருக்கிறது, அதே வேளையில் முன்பு இருந்தது போல், எந்தப் பொதுக் குளத்திலோ அல்லது ஆற்றிலோ தலித் மக்கள் தண்ணீர் எடுக்க முடியாது என்ற நிலைமை இப்போது இல்லை. பெண்ணுரிமை, ஜனநாயக உரிமைகள் என அனைத்திலும் இந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிகழ்ந்துள்ளன, இன்னும் செல்ல வேண்டிய தொலைவும் நீண்டிருக்கிறது.
தற்போது மதவெறி சக்திகளின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதில் கலை இலக்கியக் களம் ஒரு சுவராக உயர்ந்தெழ வேண்டும். மதவாத சாதிய அடையாளங்கள் புறந்தள்ளப்பட்டு, பாலினப் பாகுபாடுகள் ஒதுக்கித்தள்ளப்பட்டு, சகிப்புத்தன்மையின் அடையாளம், ஜனநாயக அடையாளம், நல்லிணக்க அடையாளம், சமத்துவ அடையாளம், பன்முகப் பண்பாட்டு அடையாளம், அமைதியின் அடையாளம் நிலைநாட்டப்படும் நாள் வர வேண்டும். அந்த நாள் உடனே வந்துவிடாது. பழமைவாதம் ஒரு வெள்ளம் போல் நம்மை மூழ்கடிக்கப் பாயும். அந்த வெள்ள மட்டத்திற்கு மேலே தலையை உயர்த்துவதே மக்கள் கலைஞர்கள், இலக்கியவாதிகளின் கடமை. போர் இல்லாத, சாதி இல்லாத, மதம் இல்லாத, பாகுபாடுகள் இல்லாத உலகம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
படங்கள்: செ. கவாஸ்கர்