Tuesday 22 November 2011

யம்மா என்று அலறிய மன்னன்

வாழ்க்கை எத்தனை சுவை மயம்!






நாடகத்தில் நடிக்கிற ஆசை எனக்குச் சிறு வயதிலேயே தொற்றிக்கொண்டது. கோம்பையில் 3ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் எனக்கு வில்லன் வேடம்! திரைப்படங்களில் வருவது போல் ஆப்பிள் பழத்தைக் கத்தியால் குத்தி எடுத்து கடித்துக்கொண்டே வசனம் பேசச் சொன்னால்கள். நாடகத்திற்காகப் தலைமுடியை வெட்டாமல் வளர்த்துக்கொள்ள பெற்றோரிடம் பேசி அனுமதி பெற்றார்கள். ஒத்திகைகளில் நான் நன்றாகச் செய்வதாகப் பாராட்டினார்கள். ஆனால் விழா நாள் ஏனோ தள்ளிப்போனது. மின் ஊழியரான தந்தைக்கு இடமாற்றல் ஆணை வந்தது.

திருமங்கலத்தில் பி.கே.என். உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தபோது மகாபாரதக் கதை சார்ந்த ஒரு நாடகம். அதிலே கர்ணனின் மனைவிக்கு நான் தோழி. அந்தப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு ஊரே திரளும். ஆகவே, பள்ளியின் கழிப்பறைகளை அன்றைக்குப் பாலின அடிப்படையில் பிரித்திருந்தார்கள். நாடகம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஒப்பனைகள் முடிந்து, சேலை கட்டிவிட்டிருந்தார்கள். அரங்கத் திரை தூக்கப்படுவதற்கு சில மணித்துளிகள் இருந்தபோது எனக்கு பயங்கரமாக ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வர, அரங்கின் பின்பகுதியில் இருந்த கழிப்பறையின் ஆண்கள் பகுதிக்கு வேகமாகச் சென்றேன். அங்கே நின்றிருந்த ஆண்கள் என்னை ஏன் வெறித்துப் பார்த்தார்கள் என்று வெகுநேரத்திற்கு எனக்கு விளங்கவில்லை.

அதே ஊரில் நாங்கள் குடியிருந்த வீடு உட்பட நான்கைந்து வீடுகள் சூழ, நடுவில் ஒரு பரந்த இடம் அமைந்திருந்தது. எல்லா வீடுகளின் பசங்களும், கந்தன் கலைக்குழு தொடங்கினோம். அதன் முதல் நாடகத்திற்கான ஒத்திகைகள் முடிந்து மேடையேற்றத் தயாரானோம். எதிர்வீட்டுத் திண்ணைதான் மேடை. (அந்த வீட்டில்தான் என் கண்மா என்ற என். கண்ணம்மாவோடு எனக்கு நட்புறவு மலர்ந்தது. அந்தக் கண்மாவைத்தான் இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன்.)

அது ஒரு சரித்திர நாடகம். அதில் எனக்கு ஒரு துரோகத் தளபதி கதாபாத்திரம். தெரு முழுக்க நாடகம் பார்க்க வந்திருந்தார்கள். எல்லோரும் நாடகத்திற்காக நன்கொடை கொடுத்திருந்தார்கள்.

கதைப்படி, நான் எந்த மன்னனுடைய தளபதியோ அவனுக்கும் எதிரி மன்னனுக்கும் போர்க்களத்தில் நேரடிச் சண்டை நடக்கும். நான் அடிபட்டவன் போல் கீழே கிடப்பேன். எதிரியுடன் செய்த சூழ்ச்சிப்படி நான் மெதுவாக எழுந்து எனது மன்னனின் முதுகில் கத்தியால் குத்த வேண்டும். அவன், "தாயே! தாயகமே! தமிழ் மண்ணே! உனக்காக நான் மடியில் விழுந்தேன், துரோகத்தால் மடிந்தேன் என வரலாறு சொல்லட்டும்... உன்னை என் மக்கள் காப்பார்கள்..." என்பது போல ஒரு வீர உரையாற்றிக்கொண்டே சாய வேண்டும்.

நாடகத்தில் எதிரி மன்னனனாக நடிக்க வேண்டிய அண்ணனுக்கு உடல் நலம் குன்றியதால், இன்னொரு அண்ணனைத் தயார் செய்தோம். பாடங்களை ஒரே வாசிப்பில் மனனம் செய்யக்கூடிய திறமை படைத்தவன் அவன்.

தளபதிக்கான உடைகளை அணிந்த பின் பார்த்தால் என் கத்தியைக் காணோம்! ஒரு அட்டையைக் கத்தி போல வெட்டி, அதன் மேல் வெள்ளிச் சரிகைத்தாளை ஒட்டி வைத்திருந்தோம். இரண்டு மன்னர்களுக்குமான வாள்களை, இரண்டு நீண்ட பிரம்புகளைச் சுற்றி வண்ணம் பூசித் தயாரித்திருந்தோம். அந்த வாள்கள் வைத்த இடத்தில் இருக்க, என் கத்தியை மட்டும் காணவில்லை (பிற்காலத்திய விசாரணையில், அடுத்த தெருவில் எங்களுக்குப் போட்டியாக கண்ணன் நாடக மன்றம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போட்டிக்குழுவைச் சேர்ந்தவர்கள், எங்கள் நாடகத்தைச் சீர்குலைப்பதற்காக அந்தக் கத்தியை கடத்தியிருந்தார்கள் என்று தெரியவந்தது. அந்த வயதிலேயே பொறாமை! அந்த வயதிலேயே கந்தன்-கண்ணன் என சைவ-வைணவ அரசியல்!)

இயக்குநர் அண்ணன், "அவசரத்துக்கு ஏதாவது செய்டா," என்று ஆணையிட்டான். ஒரு சோளத்தட்டைக் குச்சியை அரையடி நீளத்திற்கு ஒடித்து எடுத்து, சரிகைத் தாள் சுற்றி இடுப்புத் துண்டில் செருகிக்கொண்டு மேடைக்குச் சென்றேன்.

கடைசிக் காட்சி வந்தது. நானும் வேறு இரண்டு பேரும் கீழே கிடக்க, இரண்டு மன்னர்களும் தங்கள் வாள்களால் சண்டை போட்டார்கள். எதிரி மன்னனாக நடித்த அண்ணன் கடைசி நேர ஒத்திகையில் மட்டும்தான் கலந்துகொண்டான் என்பதால், மேடையில் அவன் தனக்குத் தோன்றியபடியெல்லாம் செய்துகொண்டிருந்தான். அந்தப் போர்க்களக் காட்சியில் அவன், நிறைய சினிமாக்களைப் பார்த்த தாக்கத்தில் தன் வாயாலேயே "டைய்ங்... டொய்ங்... டிங்... டங்" என்று வாள்களின் உரசல் சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தான்!

தரையில் கிடந்த நான், "அண்ணே, வாள் மாதிரி நீங்க வாயால சத்தம்போட வேணாம்... அதுதான் அந்த வாள்கள உரசுரப்ப தானாவே சத்தம் வரும்ல. என்றேன்.

"சும்மா கிடடா... நான் மன்னன். நீ தளபதி. எனக்கு நீ எப்படி கட்டளை போடலாம்," என்று கேட்ட அந்த எதிரி, தொடர்ந்து டைய்ங் டொய்ங் டிங் டங் ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தான்! பார்வையாளர்கள் சிரித்தார்கள்.

என்னுடைய மன்னனுக்குத் தாங்கவில்லை. "டேய், சீக்கிரம் எந்திருச்சி என் முதுகுல குத்திக் கொல்ரா... இல்லாட்டி இவன் நாடகத்தக் கொன்னுறுவான்," என்றான்.

துரோகத் தளபதி வேடம் என்பதற்காக நடிப்பில் நான் அவர்களுக்குச் சோடை போக முடியுமா? நானும் முகத்திலும் உடலிலும் ஏகப்பட்ட உணர்ச்சிகளைக் காட்டியவாறு மெதுவாக எழுந்தேன். இடுப்பிலிருந்த கத்தியை உருவினேன். எனது மன்னனின் முதுகில் ஓங்கிக் குத்தினேன்.

"ஆ.. யம்மா," என்று அலறிக்கொண்டே ஒரு கையால் தன் முதுகைப் பிடித்துக்கொண்டான் அவன்.

"டேய், என்னடா வசனத்தை மாத்திச் சொல்ற... தாயே தமிழ் மண்ணேன்னு சொல்லிட்டே கீழே விழுடா..." என்றான் இயக்குநர்.

"போடா... இவன் நெசமாவே குத்திட்டாண்டா... வலிக்குதுடா," என்றான் இவன். அவன் முதுகிலிருந்து ரத்தத் துளி எட்டிப்பார்த்தது. இயக்குநர் அசரீரி போல அந்தக் கடைசி உரையாடலைத் தானே சொல்லிவிட்டு திரையை இறக்க ஆணையிட்டான்.

வாய்விட்டுச் சிரித்த அத்தனை வீட்டுக்காரர்களும் எங்களைத் தட்டிக்கொடுத்துவிட்டுத்தான் போனார்கள். பக்கத்து வீட்டு அத்தை தேங்காய் எண்ணெய் கொண்டுவந்து அந்த அண்ணனின் முதுகில் தட்டைக்குச்சிக் கத்தி குத்திய இடத்தில் தடவிவிட்டார்.

மதுரையில் செம்மலர் கலைக்குழுவின் வீதி நாடகங்கள், பீப்பிள்ஸ் தியேட்டர் குழுவின் மேடை நாடகங்கள் என்று என் நாடக ஈடுபாடு தொடர்ந்தது. சென்னைக்கு வந்த பின் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆயினும் நாடக தாகம் அடங்கவில்லை. நாடகங்களைப் பார்ப்பது, அவற்றைப்பற்றி எழுதுவது என்று அந்த தாகத்தைத் தணித்துக்கொள்கிறேன். எத்தனையோ நாடகங்கள் பார்த்துவிட்டாலும் திருமங்கலம் அனுபவத்தை மறக்க முடியவில்லை.

No comments: