Wednesday 11 August 2010

கம்யூனிசம் என்றால்... 6


வர்க்கம் எனப்படுவது யாதெனின்


உடைமை வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என இரண்டு பிரிவுகள் இருப்பதைக் கண்டோம். அந்த உடைமை வர்க்கம்தான் குறிப்பிட்ட சமுதாயத்தில், குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆளும் வர்க்கமாக இருக்கிறது. ஆளும் வர்க்கம் என்றால் அரசாங்கத்தின் ஆட்சி பீடத்தில் இருக்கிறவர்கள் என்று அர்த்தமல்ல. அந்த சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிற, மற்றவர்களின் உழைப்பைப் பயன்படுத்துகிற வர்க்கம் என்று பொருள்.

முதலில் எங்கும் காடாகவே இருந்தது. அந்தக் காடுகளில் மனிதர்கள் குழுக்குழுவாக வாழ்ந்தார்கள். ஒவ்வொரு காட்டின் தன்மை, அங்கு வாழ்ந்த மனிதர்களின் உடல் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் வெவ்வேறு குழுக்களாக இருந்தார்கள். இனக் குழு என்று சொல்லப்படுவது இதுதான். அன்றைய காலத்தில் இப்போது போல் பல நூறுகோடி மக்கள் தொகை என்பதெல்லாம் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சிறு சிறு இனக்குழுக்களாகத்தான் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் நூறுபேர், நூற்றைம்பது பேர் என்றுதான் இருந்தார்கள். அனுபவத்தால் சேர்த்த அறிவின் அடிப்படையில் வனத்தின் கடுமையான நிலைமைகளில் வாழ்வது எப்படி, விலங்குகளில் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பது எப்படி, விலங்குளை வேட்டையாடுவது எப்படி, எப்படிப்பட்ட தாவர உணவுகளை உண்ணலாம், மழை வந்தால் என்ன செய்யலாம், நெருப்பு பிடித்துக்கொண்டால் என்ன செய்யலாம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு வழிகாட்டியவர்கள் குழுக்களின் தலைவர்கள் ஆனார்கள். இந்திய நிலப்பகுதிகளில் இப்படி குழுத்தலைவராக இருந்தவர்தான் ‘கணபதி’ என்று பின்னர் குறிப்பிடப்பட்டார். கணம் என்றால் குழு அல்லது சமூகம் என்று பொருள். பதி என்றால் தலைவர்.

உற்பத்திக் கருவியாக அதாவது உற்பத்தி செய்வதற்கான ஆதாரமாக நிலம் பயன்படுத்தப்படுவது தொடங்கியதைப் பற்றிப் பார்த்தோம். கருவி என்று வந்துவிட்டால் அதைக் கையாள்வதற்கான கைகள் வேண்டும் அல்லவா? அந்தக் கைகள் மற்றவர்களுடையதாக இருக்க, அந்த உழைப்பின் பயனை ஒருவர் அல்லது ஒருசிலர் மட்டும் அனுபவிப்பதே சுரண்டல். வன்முறை, தந்திரம் என பல வழிகளில் ஒருவர் நிலத்தை வளைத்தை வளைத்துப் போட்டுக்கொண்டாலும் அவரால் மட்டுமே நிலத்தில் இறங்கி வேலை செய்து பயிர்களை விளைவிக்க முடியாது அல்லவா? எனவே அவர் அந்த வேலையில் பலரை ஈடுபடுத்துகிறார். நிலத்தைக் கைப்பற்றும் போட்டியில் பின்தங்கியவர்கள், அப்படியொரு போட்டி நடப்பதே தங்களது கவனத்திற்கு வராமல் ஏமாந்தவர்கள், ஆனால் உழைப்பதற்குச் சலிக்காதவர்கள் நிலத்தில் இறங்கினார்கள்.
தொடக்கத்தில் இவ்வாறு வேலை செய்வதற்காக காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்துக்கொண்டுவந்து ஈடுபடுத்தினார்கள். அவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். நிலத்தில் மட்டுமல்லாமல் பெரிய கோட்டைகள் கட்டுவது, நடமாட்டத்துக்கு வசதியாக சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளுக்கும் அந்த அடிமைகளையே பயன்படுத்தினார்கள். வேலை முடிந்ததும் விரட்டிவிட்டார்கள். ஒரு செல்வந்தர் தன் அடிமைகளை மற்ற செல்வந்தர்களுக்குப் பரிசாக அளிப்பார். ஆடு மாடுகளை விற்பது போல். வேலை செய்வதற்காக அடிமைகளை விற்பனை செய்வது என்ற கொடுமையும் நடந்தது. அடிமைகள் அளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால் கூடுதலாக இருப்பவர்களைக் கொன்றுவிடுவார்கள். இப்படி அடிமை முறை இருந்த காலத்தை அடிமைச் சமுதாயம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நிலம் என்பது அடிப்படையான, நிலையான ஒரு உற்பத்திக் கருவியாகப் பயன்படும் என்று கண்டறிந்த பின் அதே அடிமைகள் விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். நிலம் இல்லாதவர்கள் மட்டுமல்லாமல் சிறு அளவுக்கு மட்டுமே நிலம் வைத்திருந்தவர்களும் பெரிய பண்ணை நிலங்களில் வேலை செய்யச் சென்றார்கள். இந்த விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மண்ணை சரிப்படுத்தினார்கள், பயிரிட்டார்கள், பயிரைப் பாதுகாத்தார்கள், வளர்த்தார்கள், பயிரிலிருந்து தானியங்கள் விளைந்ததும் அவற்றை அறுவடை செய்து கொடுத்தார்கள்.

இப்படி உழைப்பவர்களின் பங்களிப்பு என்பது இல்லை என்றால், எவ்வளவு பெரிய நிலம் இருந்தாலும் அதனை விவசாயத்துக்கும் பயன்படுத்துவதில் உடைமையாளருக்கும் உழைப்பவருக்கும் சம பங்கு இருக்கிறது. ஆனால், விளைச்சலை அனுபவிப்பது என்று வருகிறபோது மட்டும் சமமாகப் பங்கிடப்படுவதில்லை.

உண்மையிலேயே பாடுபட்டு உற்பத்தி செய்தவர்களுக்கு, நிலத்தில் விளைந்ததில் கொஞ்சத்தைக் கொடுத்துவிட்டு பெரும்பங்கு மீதி விளைச்சல்களை உடைமையாளர் தானே வைத்துக்கொள்கிறார். உழைத்ததற்கான பங்காக உழைப்பாளிக்கு அவர் கொடுப்பதுதான் கூலி.
கூலியாகக் கொடுப்பது எந்த அளவுக்கு இருக்கும் என்றால், மறுநாள் வேலைக்கு வரவேண்டுமானால் உயிரோடும் உழைப்பதற்கான தெம்போடும் இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு உயிரோடும் தெம்போடும் வைத்திருப்பதற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தானியம் கூலியாகக் கொடுக்கப்பட்டது. (பணம் என்பது உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் தானியத்திற்கு பதிலாக பணமே கூலியாகத் தரப்பட்டது. பணம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்பது சுவையான தனி வரலாறு.)

இதுதான் உழைப்புச் சுரண்டல் என்பது. நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்டு, பெரிய அளவுக்கு அதைக் கைப்பற்றியவர்கள், அவரவர் பலத்துக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமாகக் கைப்பற்றியவர்கள், அந்த நிலங்களில் பாடுபட்டு உழைத்துக்கொடுத்துவிட்டுப் பசியாறியவர்கள் என்ற இந்த சமூக அமைப்புக்குப் பெயர்தான் நிலவுடைமைச் சமுதாய அல்லது பண்ணைச் சமுதாயம். நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

இந்தக் காலத்திலேயே கூட ஒரு அரையடி நிலத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதற்கோ, அல்லது கைப்பற்றிய நிலத்தில் அரையடி அளவுக்குக் கூட வேறு யாரும் எடுத்துக்கொள்ளாமல் தடுப்பதற்கோ எவ்வளவு வன்மம் நிறைந்த மோதல்கள் நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கிறோம். சில நேரங்களில் வெட்டுக்குத்து, கொலை செய்கிற அளவுக்குக்கூட அந்த மோதல்கள் போய்விடுகின்றன. சட்டம், விதி, கண்காணிப்பதற்கான அதிகார அமைப்பு என்றெல்லாம் இருக்கிற இந்தக் காலத்திலேயே இப்படியெல்லாம் நடக்கிறது என்றால் அந்தக் காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று எளிதாக ஊகிக்கலாம். நிலத்தைக் கைப்பற்றும் ஆசையில்லாதவர்கள், அதற்கு வழியற்றவர்கள் எந்த நிலத்தில் வேண்டுமானாலும் இறங்கி உழைத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நிலம் இயற்கை கொடுத்தது, அதிலே உழைப்பதற்கும் தேவையானதை உற்பத்தி செய்துகொள்வதற்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றே நினைத்தார்கள். நிலத்தை வளைத்துப் போட்டவர்கள் அவர்களை அடித்தார்கள். இதைத் தொடர்ந்து பல வன்முறை மோதல்கள் நடைபெற்றன.

அப்போதுதான் இதையெல்லாம் கண்காணிப்பதற்கும் முறைப்படுத்துவதற்கும் ஒரு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த ஏற்பாட்டிற்குப் பெயர்தான் அரசு. அதுவரையில் மனிதர்கள் சுதந்திரப் பறவைகள்தான். அடிப்பவர்களும் சுதந்திரமானவர்களே, அடிபடுகிறவர்களும் சுதந்திரமானவர்களே. இப்போது அரசு என்ற ஒரு ஏற்பாடு உருவாகி, சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன இந்த நிலம் இவருக்குச் சொந்தம், அதை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் வருகிறது. நிலத்தில் இறங்கி உழைக்கிறவர்கள் கோபித்துக்கொள்வார்களே? அதைத் தவிர்க்க, உழைக்கிறவர்களுக்கு நிலச் சொந்தக்காரர்கள் எவ்வளவு கூலி தரவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
அது வரையில் குழுக்களின் தலைவர்கள் மட்டுமே இருந்தார்கள். தலைவர் என்றால் உடனே நம் புத்தியில் ஆண் உருவம்தான் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் அனுபவ அறிவின் அடிப்படையில் தங்களது கூட்டங்களுக்குப் பெண்களும் தலைமை தாங்கினார்கள். சொல்லப்போனால் குடும்ப உறவு என்பதெல்லாம் உருவாகியிராத அக்காலத்தில் தாயைத்தான் பிள்ளைகளுக்குத் தெரியும். தாயை வைத்தே ஒருவர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டார். தாய் வழிச் சமூகம் என்று இதைச் சொல்வார்கள்.
குழுக்களின் தலைவர் என்பதற்கு மாறாக காடு, மலை, ஆறு, வயல், ஊர் என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அரசு என்ற அமைப்பு உருவானது. ஆம், அரசு என்பது உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான்.

இவ்வாறாக அரசு உருவான பின் பெண் எப்படி தலைமையிடத்திலிருந்து ஆணுக்குக் கீழ்ப்பட்ட இடத்திற்குத் தள்ளப்பட்டாள்? இதில் சாதி, மதம் எப்படி உருவானது? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

No comments: