Wednesday 26 May 2010

ரசியாவில் கம்யூனிசம் தோற்றது ஏன்? (கம்யூனிசம் என்றால் - 2)

மருத்துவரின் குற்றமா அல்லது

மருத்துவத்தின் குற்றமா?

வரலாற்றுக்குள் நுழையாமல் நேரடியாகவே கேள்விகளை இனி அணுகலாம்.
முதல் கேள்வி: ரசியாவில் கம்யூனிசம் தோற்றது ஏன்?

ரசியாவில் சோதனை செய்து பார்க்கப்பட்டது கம்யூனிசம் அல்ல. கம்யூனிசம் அல்லது பொதுவுடைமை சமுதாயம் என்பது உருவாவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ரசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது ஒரு சமூகவுடைமை (சோசலிசம்) அமைப்புக்கான ஒரு முன்மாதிரி (மாடல்) அமைப்புதான். உலகில் வேறு எங்கும் அதற்கான வெற்றிகரமான முன்மாதிரிகள் இல்லாத நிலையில், ரசியாவில் நடந்த மாபெரும் புரட்சியின் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, புரட்சிக்காக இணைந்த பல்வேறு அரசியல் பிரிவுகளின் ஒற்றுமையையும் மக்கள் ஒருமைப்பாட்டையும் பயன்படுத்திக்கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சி அந்த சோசலிச மாடலை செயல்படுத்தியது.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் அரசுடைமை, பொதுவுடைமை என்பதைப் புரிந்துகொள்வது போல் பொதுமக்கள் புரிந்துகொள்ள இயலாதுதான். ஆகவே, அன்று லெனின் அரசு நிர்வாகத்துக்கு முன்வைத்த கோட்பாடு புதிய பொருளாதாரக் கொள்கை என்பதே. அதாவது, அந்தக் கோட்பாட்டில் முழுக்க முழுக்க அரசுடைமை என்பது இருக்காது. அடிப்படையான பெருந்தொழில்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்; மற்ற தொழில்களில் தனியார் அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அந்தத் தனியாரின் செயல்திறன், அவர்களது உற்பத்தி ஆற்றல், அவர்களது நிர்வாக வல்லமை ஆகியவற்றின் பலன்கள் புதிய சோசலிச அமைப்புக்குக் கிடைக்கும். அதே நேரத்தில் அரசின் கண்காணிப்பு என்பதும் இருக்கும். தனியாரின் லாபம் வரம்புமீறாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும். தொழிலாளர்களை முதலாளிகள் நினைத்தால் நியமிக்கலாம், நினைத்தால் வீட்டுக்கு அனுப்பலாம் என்பது நடக்காது. கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, நிதி நிர்வாகம், அடிப்படைத்தேவைகளுக்கான பொதுவிநியோகம் போன்றவை அரசின் பொறுப்பாக இருக்கும்.

விவசாயத்தைப் பொறுத்தவரையில் விவசாயிகள் தாங்களாக முன்வந்து கூட்டுப்பண்ணை முறையில் இணையலாம்; தங்களது நிலத்தில் தாங்களே சொந்தமாக விவசாயம் செய்ய விரும்புகிறவர்கள் அப்படியே செய்யலாம்.

இப்படித்தான் லெனின் தொடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கை இருந்தது. தனி நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் பின்னர் கூட்டுப்பண்ணை முறையில் ஒவ்வொரு தனி விவசாயிக்கும் கூடுதல் வருமானம் கிடைப்பதைப் பார்த்து தாங்களும் கூட்டுப்பண்ணையில் இணைந்தார்கள்.

இன்னொரு பக்கம் சோசலிச அமைப்பின் எதிரிகள் (முந்தைய மன்னராட்சியில் அமோகமாகக் கொள்ளையடித்தவர்கள்) அதற்கு எதிரான பிரச்சாரத்தையும் அப்போதே தொடங்கிவிட்டார்கள்.

படிப்படியாக முழுமையான சோசலிசத்துக்குப் போவதே லெனின் உள்ளிட்ட அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் கணக்கு. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு வந்த தலைவர்கள் (மேல்மட்டத் தலைவர்கள் முதல் உள்ளூர் கிளைமட்டத் தலைவர்கள் வரையில்) ஒரு அதீதமான, தவறான புரிதலுக்குப் போனார்கள். அதிரடியாக அனைத்தையும் அரசுடைமையாக்கினார்கள். சோசலிசத்தின் மேன்மை பற்றிய சிந்தனைகள் மக்களிடையே முற்றிலுமாக வேரூன்றாத நிலையில் இந்த அதிரடி அரசுடைமை நடவடிக்கைகள் மனக்கசப்புக்கு இட்டுச் சென்றது. இன்னொரு பக்கம், அந்தந்தத்ததொழில் சார்ந்தோரிடையே ஒரு அலட்சியப்போக்கிற்கு இட்டுச் சென்றது. (இந்தியாவிலும் பொதுத்துறை ஊழியர்கள் பலரிடையே இப்படிப்பட்ட அலட்சியப்போக்கைப் பார்க்கிறோம் அல்லவா? பொதுத்துறையே வீண் என்ற மனப்போக்கு வளரவும், தனியார்மயமானால்தான் எல்லாம் சரியாகும் என்ற வாதம் ஒலிப்பதற்கும் இது காரணமாகிறது அல்லவா? அதைப்போன்றதுதான் இது. )

பின்னொரு எதிர்காலத்தில் உருவாக வேண்டிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதைக் கொச்சையாகப் புரிந்துகொண்டவர்களாக, எங்கும் எதிலும் அரசின் கட்டுப்பாடு என்றாக்கினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரம்தான் என்பதாக, பின்னர் அது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு சர்வாதிகாரமாக, பின்னர் தனியொரு தலைவரின் சர்வாதிகாரமாக மாறியது. ஒரு தொழிற்சாலையின் குறிப்பிட்ட உற்பத்திப்பொருளின் தரம் எப்படி இருக்க வேண்டும், அதற்கான தொழில்நுட்பம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைக்கூட அந்தத் தொழிற்சாலையின் கட்சிக்குழு தலைமைதான் முடிவு செய்யும் என்கிற அளவுக்குப் போனார்கள்.

மாற்றுக்கருத்துக்கள் ஒலிப்பதற்கு இடமளிக்காத போக்கு கெட்டிப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் நோக்கம் உயர்ந்தது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கம் அது. ஆனால், அதற்கான வழிமுறை சொதப்பலாகிவிட்டது. அந்த சொதப்பல் சோசலிச அமைப்பின் மீதே மக்களுக்கு அதிருப்தி ஏற்படச் செய்தது. வறுமை ஒழிந்தது, பட்டினி பழங்கதையானது, எல்லோரும் குடியிருப்பதற்கு வீடு கிடைத்தது. கல்வி கிடைத்தது. மருத்துவம் கிடைத்தது. ஆனால், நவீன முன்னேற்றங்கள் பல வந்துசேரவில்லை. தயாரிப்புத் தரம் மிகவும் தாழ்ந்திருந்தது. மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான மேடை மறுக்கப்பட்டது. எதிரிகள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்ற எச்சரிக்கைதான் அதற்குக் காரணம். ஆனாலும், மக்களின் மாற்றுக் கருத்துக்களைக் கேட்காத ஆட்சி மக்களிடமிருந்து தனிமைப்படவே செய்யும். மக்களின் இந்தக் குமுறல் நெருப்புக் கங்கை, அமெரிக்க அரசின் உதவியோடு எதிரிகள் ஊதிவிட்டுக்கொண்டே இருந்தார்கள்.

தவறு நடந்துவிட்டதைப் புரிந்துகொண்டு சரிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கோர்பச்சேவ் காலத்தில் தொடங்கின. ஆனால், மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பது என்ற பெயரால் எதிரிகளின் பிரச்சாரங்கள் மட்டுமே முன்வந்தன. மூட நம்பிக்கைக் கருத்துக்கள் கூட பரவுவதற்கு இடமளிக்கப்பட்டது. அரசுத்தரப்பிலிருந்தோ, கட்சியின் தரப்பிலிருந்தோ எதிர்வாதங்கள் செயலூக்கத்துடன் வைக்கப்படவில்லை.

பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அரசின் கட்டுப்பாடுகள் ஒரேயடியாகக் கைவிடப்பட்டன...

அமெரிக்க ஒத்துழைப்புடன் சோவியத் யூனியன் நாட்டிற்கு உள்ளேயும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும் செயல்பட்டுக்கொண்டிருந்த யெல்ட்சின் போன்றவர்கள் இந்தச் சூழலையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். மிச்சம் மீதியிருந்த சோசலிசப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழித்துக்கட்டினார்கள். ஒட்டுமொத்த விளைவாக, ரசியாவிலிருந்து அகற்றப்பட்ட வறுமை, பட்டினி, வேலையின்மை, வறுமையை ஈடுகட்ட பாலியல் தொழில், திருட்டு, லஞ்சம் போன்ற எல்லா விதமான தொற்று நோய்களும் மறுபடியும் அந்த மக்களைத் தொற்றிக்கொண்டன.

இன்னும் விரிவாக விளக்க வேண்டிய வரலாறு இது. ஆனால் இடமும் காலமும் கருதி சுருக்க வேண்டியிருக்கிறது. ஸ்டாலின் போன்றோரின் தலைமையில் சோசலிச அரசு ஒன்று ரசியாவில் இருந்தது என்கிற பலத்தினால்தான் உலக யுத்தத்தில் உலக ஆக்கிரமிப்பு சக்திகள் பின்வாங்கின. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விடுதலைப்போராட்டம் வெற்றியடைந்ததற்கு சோசலிச சோவியத் யூனியன் ஒரு ஈர்ப்பாக அமைந்தது. அடிமைப்படுத்திய நாடுகளிலிருந்து காலனியாதிக்கவாதிகள் வெளியேறவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய காரணியாக சோவியத் யூனியன் திகழ்ந்தது. சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா உள்ளிட்ட 15 சோசலிச அரசு அமைப்பு கொண்ட நாடுகள் மலர்ந்தன. இப்படிப்பட்ட பல ஆக்கப்பூர்வ நிகழ்வுகளை மறந்துவிட்டு உலக வரலாற்றை யாராலும் எழுத முடியாது. ஆயினும், ரசியாவில் கம்யூனிசம் தோற்றது ஏன் என்ற கேள்விக்கான விடையாக மட்டும் விரித்துச்சொல்ல முயன்றதால் இந்த ஆக்கப்பூர்வக் கூறுகளை சுருக்கிச் சொல்லவேண்டியதாயிற்று.

அரசுடைமை என்றாலே பேதிமாத்திரை சாப்பிட்டவர்களாக மாறிவிடும் சுரண்டல் பேர்வழிகள், அவர்களை ஊக்குவிக்கும் வெளிநாட்டு அதிகாரக்கும்பல்கள் ஆகியோரின் கூட்டுச் சதி ஒரு முக்கியமான வெளிக்காரணம். கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறைகளில் இருந்த மேற்கூறிய குறைபாடுகள் முக்கியமான உட்காரணம். இந்த இரண்டும் சேர்ந்துதான், ரசியாவில் முன்மாதிரி என்பது இல்லாமல் தொடங்கப்பட்ட சோசலிசப் பரிசோதனை தோல்வியடைந்தது.

இது சம்பந்தப்பட்ட மனிதர்களின் தவறுதான். சம்பந்தப்பட்ட தலைவர்களின் தவறுதான். கம்யூனிசம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் கட்சிக்கு வெளியேதான் இருப்பார்கள் என்பதில்லை. உள்ளேயும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் தவறால் ஏற்படும் தோல்வி கம்யூனிசத்தின் தோல்வி அல்ல. சொல்லப்போனால் கம்யூனிசக் கோட்பாடுகளை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளக் கட்டாயப்படுத்துகிற உலகளாவிய வரலாற்று அத்தியாயம் அது.

காய்ச்சலில் விழுந்த ஒரு நோயாளிக்கு மருத்துவர் வயிற்று வலி மருந்து கொடுக்கும்போது, அந்த நோயாளியின் நிலைமை படுமோசமாகிவிடுகிறது. இது அந்த மருத்துவரின் குற்றமா அல்லது மருத்துவத்தின் குற்றமா? இதற்கான பதில்தான் ரசியாவில் கம்யூனிசம் தோற்றது ஏன் என்ற கேள்விக்கான பதிலும். கம்யூனிசம் கடைப்பிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட தோல்வி அல்ல, கம்யூனிசம் சரியாகக் கடைப்பிடிக்கப்படாததால் ஏற்பட்ட தோல்வி அது. முழுமையான வெற்றியை எப்படி உறுதிப்படுத்துவது என்ற பாடத்தைக் கற்றுத் தரும் தோல்வி அது.

ஒன்றை நன்றாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ரசியாவில் செயல்படுத்திப்பார்க்கப்பட்டது கம்யூனிச ஆட்சி அல்ல; சோசலிச ஆட்சிதான். உலகில் சமத்துவ சமுதாயம் காணப் பாடுபடுகிறவர்களுக்கெல்லாம்ஊக்கமளிக்கிற, ஒரு ஈர்ப்பு சக்தியாய் அமைந்த ஆட்சி அது.

அடுத்தடுத்த கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் விடை தேடலாம்.

2 comments:

vimalavidya said...

The "Communism "or the Marx's ECONOMICAL THEORY is the best in the world.It was implemented in wrong ways/many Mistakes were done by the persons who implemented the policies. More over they had no previous examples and experiences in that new way of ruling.The Communists parties must definitely discuss and understand the strength of "FREEDOM"/DEMOCRACY"even now a days

~SS~ said...

Good information. Thanks a lot!.