Wednesday 10 March 2010

தினமணி தலையங்கம்

மீதிக் கிணறை தாண்டவிடாமல்
தடுப்பதற்கு ஒரு (பக்க)வாதம்

பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறது மகளிர் இட ஒதுக்கீடு சட்ட முன்வரைவு. மீதிக் கிணறைத் தாண்டவிடக்கூடாது என்று சிலர் வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.

உலக மகளிர் தினத்தன்றே மாநிலங்களவையில் நிறைவேறியிருக்க வேண்டியது ஒரு நாள் தாமதமானது. இதற்கு எதிர்ப்பாளர்களின் குறுக்கீடு மட்டுமல்லாமல், அவை நடைமுறைகளைக் கையாள்வதில் ஆளுங்கட்சியினர் பக்குவ முதிர்ச்சியுடன் நடந்துகொள்ளாததும் ஒரு காரணம் என்று, இந்தச் சட்ட முன்வரைவை ஆதரிக்கிற எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. எதிர்ப்பு சக்திகளுக்கு வாய்ப்பளிக்காமல் அரசு சூட்டோடு சூடாக இதனை மக்களவையில் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “இது நிறைவேறாமல் போனால் நல்லது.... மகளிருக்கு மட்டுமல்லல, நாட்டுக்கும்,” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது ‘தினமணி’ நாளேடு. தினமணி குடும்பத்தின் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை, மகளிர் தின சிறப்புத் தொகுப்பாக பெண் தாதாக்களைப் பற்றி எழுதி, அந்த நாளின் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தியது. தினமணியோ நேரடியாக மகளிர் இட ஒதுக்கீட்டையே எதிர்த்திருக்கிறது.

“கண்துடைப்பு மசோதா” என்று தலைப்பிலேயே இதனைச் சாடுகிறது அந்தத் தலையங்கம், இதை அரைவேக்காட்டுத்தனமானது என்றும் வார்த்தைகளை வீசியிருக்கிறது. “அடிப்படையிலேயே அரைவேக்காட்டுத்தனமானதும் உண்மையில் மகளிர் நலத்திலோ, மக்களாட்சி தத்துவத்துக்கு மகத்துவம் சேர்க்கும் விதத்திலோ அமையாததுமான இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது சாதகங்களை விட பாதகங்களை அதிகமாக உள்ளடக்கிய ஒன்று என்பதுதான் உண்மை,” என்று தாக்கியிருக்கிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று முற்போக்கு சக்திகள் பாராட்டுகிற இந்த மசோதா குறித்து தினமணி முன்வைக்கும் வாதங்களின் சாராம்சம் இவைதாம்: நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் சுழற்சி முறையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், அனுபவமிக்கவர்களாக, ஏற்கெனவே பல முறை குறிப்பிட்ட தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிற ஆண்கள், அந்தத் தொகுதி பெண்களுக்காக என ஒதுக்கப்பட்டால் மறுபடியும் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும் என்பது ஒரு வாதம்; அந்தத் தொகுதி மக்களாலும் தாங்கள் இதுவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வந்தவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் என்பது ஒரு வாதம்.
அரசியல்வாதிகளின் பினாமிகள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதும் ஒரு வாதம்.

சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கிற பெண்களின் அதிகாரமற்ற நிலை, குடும்பம் முதல் அரசியல் வரையில் எல்லா மட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் ஆணாதிக்கம், பண்பாட்டுப் பெருமையின் பெயரால் தொடரும் பெண்ணடிமைத்தனம்... இவை பற்றியெல்லாம் தினமணியிலேயே நிறைய கட்டுரைகளும் செய்திகளும் வந்துள்ளன. இட ஒதுக்கீட்டால் இந்த நிலைமை உடனடியாக அடியோடு மாறிவிடும் என்று யாரும் கற்பனையில் மூழ்கவில்லை. ஆனால், இந்த நிலைமையை மாற்றுவதற்கான ஒரு பெரிய அடியெடுத்துவைக்கிற நடவடிக்கைதான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் குரல் வலுவாக ஒலிக்கச் செய்வதற்கான இந்த ஏற்பாடு.

புதிதாக ஒன்று வருகிறபோது பழைய ஏற்பாடுகளில் சிறு பாதிப்புகள் ஏற்படவே செய்யும். அப்படிப்பட்ட ஒரு பாதிப்புதான், ஏற்கெனவே பல முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட முடியாமல் போகும் என்பது. ஆனால் கட்சியின் சார்பில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிற நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், புதிய புதிய திறமையாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட திறமையாளர்கள் பெண்களாகவும் இருப்பார்கள் என்பது நாட்டின் ஜனநாயகத்தையும், சமூக சமநிலையையும் வலுப்படுத்துதற்கான பயணமாகவே இருக்கும். ஆகவேதான், அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் இந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள்.

பினாமிகள் வந்துவிடுவார்கள் என்பதெல்லாம் வெறும் பூச்சாண்டி வார்த்தைகள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்ட நேரத்திலும் இதே போன்றுதான் கூறப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களின் பிரதிநிதிகளாகவும் ஊராட்சிகளின் தலைவர்களாகவும் வந்த பெண்கள் தங்கள் தலைமைத் தகுதியையும், தங்களது சொந்த அறிவாற்றலின் அடிப்படையில் முடிவெடுக்கும் வல்லமையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, அந்தப் பூச்சாண்டியை விரட்டியடித்திருக்கிறார்கள். உள்ளாட்சிகளின் பெண் உறுப்பினர்கள் பற்றிய ஆய்வுகள் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மற்றபடி, ஒரு ஆண் அரசியல்வாதியின் குடும்பத்துப் பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா என்ன? அவர்கள் எப்படிப்பட்ட அரசியலை, எத்தகைய கொள்கையை ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம்.

ஆக, தினமணி எதிர்ப்பின் ஆழத்தில் தேர்தல்களில் மட்டுமல்ல எந்தத் துறையிலுமே, எந்தப் பிரிவினருக்குமே இட ஒதுக்கீடு என்கிற ஏற்பாடே கூடாது என்கிற வறட்டுவாதம்தான் ஊடுறுவியிருக்கிறது. அரசியல் செயல்பாடுகளில் இத்தனை காலமாய்ப் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிற சமுதாயத்தின் சரி பாதி மூளைக்கு இப்படி மூன்றில் ஒரு பங்கு இடமாவது அளிக்கிற இந்த 108-வது சட்டத்திருத்தம், நடைமுறைக்கு வந்தபின் இப்படிப்பட்ட குதர்க்க வாதங்களின் பொய்மையைக் கிழித்துக கீழே போடும். மானுட பக்கவாதம் முற்றிலுமாக நீங்குவதை நோக்கி சமுதாயம் மேலும் நடைபோடும்.
-அ. குமரேசன்

Tuesday 9 March 2010

எந்த நேரத்தில் எதைப் பற்றிப் பேசுவது?


மாறுபட்ட முயற்சி
மாற்றத்திற்கு உதவ வேண்டாமா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடையாளம் அழிக்கப்பட்டு வந்திருக்கிறது பெண்ணினம். அவர்களது உரிமைகளின் அடையாளமாக உலக மகளிர் தினம் கொண்டாடுவது என்பது தொடங்கி ஒரு நூறாண்டுதான் ஆகிறது. பெண்கள் முன் போல் வீட்டுக்குள் அடங்கியிருக்காததால்தான், சுதந்திரமாய் வெளியே சுற்றுகிறார்கள் என்பதால்தான் சமூகக் கேடுகள் பெருத்துவிட்டன, இந்த நிலைமையில் மகளிர் தினம் என்பதெல்லாம் தேவைதானா என்று கேட்போர் இந்த 2010-ம் ஆண்டிலும் இருக்கிறார்கள். அவர்கள் இப்படிக் கேட்பதே மகளிர் தினம் கடைப்பிடிக்கப்படுவதன் கட்டாயத் தேவையை உணர்த்துகிறது.

இந்த நாள் ஒவ்வொரு வகையினராலும் ஒவ்வொரு வகையாகக் கொண்டாடப்பட்டது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சம்பிராதாயமாக சில நிகழ்ச்சிகள். மாதர் அமைப்புகள் பொதுக்கூட்டம், கருத்தரங்கம், விளையாட்டுப்போட்டிகள் என பல்வேறு வடிவங்களில் கொண்டாடின. இருபாலரும் பணிபுரியும் இடங்களில் பாலின சமத்துவம் குறித்த ஆரோக்கியமான விவாத நிகழ்ச்சிகளை சில தொழிற்சங்கங்கள் நடத்தின.
ஊடகங்களும் இந்த நாளுக்கு முக்கியத்துவம் வழங்கின. நூற்றாண்டு என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளித்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முந்தைய ஆண்டுகளை விட கூடுதலாக நல்ல கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடத்தப்பட்டது மாறுதலாக இருந்தது. மகளிர் தினத்தை பெண்களின் அழகு சாதனப் பொருள் விற்பனைக்கான விளம்பரக் களமாகப் பயன்படுத்தி வந்ததற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்த மாதர் அமைப்புகளுக்கு இது ஒரு சிறிய வெற்றி என்றே சொல்லலாம்.

இந்த நூற்றாண்டையொட்டியாவது நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்று பல ஏடுகள் தலையங்கம் தீட்டியுள்ளன. அநேகமாக அனைத்து ஏடுகளிலும் சிறப்புக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சாதனைப் பெண்களின் நேர்காணல்கள், போராளிப் பெண்களின் போராட்ட அனுபவங்கள் என வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆக்கப்பூர்வமான முறையில் மகளிர் தின சிந்தனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதைக் குறிப்பிடும்போது, ஒரு ஆங்கில நாளேட்டின் “மாறுபட்ட” முயற்சி பற்றியும் சொல்லவேண்டியிருக்கிறது.

‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் மார்ச் 8 தேதிய இதழின் இரண்டாம் பக்கத்தில் மாறுபட்ட பெண்கள் பற்றிய ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த மாறுபட்ட பெண்கள் யாரென்றால்... தாதாக்கள்! சங்கிலித் திருட்டில் ஈடுபடும் ஒரு பெண், வீட்டுவேலைக்குச் சேர்ந்து கொள்ளையடிக்கிறவர், கள்ளச்சாராய வியாபாரம் செய்கிறவர், அடியாட்கள் துணையுடன் தனது வட்டாரத்தில் கோலோச்சும் ரவுடித் தலைவி... இப்படியாகப்பட்டவர்கள் பற்றி அந்தத் தொகுப்பில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 2008-ம் ஆண்டில் பெண்களின் இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்பாகப் பதிவான வழக்குகள் 14,129 என்ற தகவலும் தரப்பட்டிருக்கிறது.

முன்பு ஒரு தமிழ் நாளேடு, மதுக் கடை வாசலில் நின்றபடி மது குடித்துக்கொண்டிருக்கும் ஒரு தொழிலாளிப் பெண்ணின் படத்தைப் போட்டு, “இதற்குத்தான் பெண் விடுதலையா” என்று தலைப்பிட்டிருந்தது. அதற்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோது, “கண்டனம் தெரிவிக்க வந்திருந்தவர்களில் அந்தப் பெண் இல்லை, சுடிதார் அணிந்த, ஜீன்ஸ் அணிந்த, டீ சர்ட் போட்ட, கிராப் வெட்டிய, லிப்ஸ்டிக் பூசிய, ஆங்கிலம் பேசிய பெண்கள்தான் வந்திருந்தார்கள்,” என்று எழுதி தன் வக்கிரத்தை மேலும் காட்டியது.
‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தொகுப்பு அப்படிப்பட்ட வக்கிரத் தொனியில் இல்லை என்பது உண்மைதான். இந்தப் பெண்கள் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தார்கள் என்பதையும் அந்தத் தொகுப்பு சொல்கிறது.

காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் (பொருளாதாரக் குற்றப்பிரிவு) திலகவதி அளித்துள்ள பேட்டியில், இத்தனை பெண்கள் இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தாலும், பெரும்பாலானோர் விவகாரங்களில் அவர்களை இயக்குவது ஆண்கள்தான் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். நுகர்வுக் கலாச்சாரம் பெருகுவதுதான் இதற்கும் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சமூகத்தின் உண்மை நிலைமைகளைப் புரிந்துகொள்ள இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் தேவைதான். ஆனால் எந்த நேரத்தில் எதைப் பற்றிப் பேசுவது என்ற நெறி வேண்டாமா? மறுக்கப்படுகிற பெண்ணுரிமை, தொடர்கிற குடும்ப வன்முறை, பெண்ணின் சுயமரியாதையை இழிவு செய்யும் மடமை, சம மரியாதையைத் தடுக்கும் கொடுமை... இவற்றிற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்குத் தோள்கொடுப்பதல்லவா இந்த நாளில் முக்கியம்? அதைப் பற்றிய சிந்தனைகளை வலுவாகவும் விரிவாகவும் வெளியிட வேண்டாமா? ஏதோ அந்தப் பிரச்சனையெல்லாம் முடிந்துவிட்டது போலவும், இப்போது விதிவிலக்காக எங்கேனும் இருக்கக்கூடிய இப்படிப்பட்ட பெண்கள் பற்றி விவாதிப்பதே முக்கியம் என்பது போலவும் “வேட்டைக்குக் கிளம்பும் பெண் தாதாக்கள்” என்றே தலைப்பிட்டு தொகுத்திருப்பதில் ஊடகநெறி தடுமாறுகிறதே!

இது பெண்களின் மையமான பிரச்சனைகள் குறித்த விவாதத்திலிருந்து திசைதிருப்புவதாகாதா?

மாறுபட்ட முயற்சிகள் மாற்றத்திற்கு உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்தே இந்த விமர்சனம்.

Saturday 6 March 2010

பொய்ச் செய்தி தயாரிப்பது எப்படி?


மக்கள் தொலைக்காட்சி
தொலைத்த மனசாட்சி

ஒரு மாற்று ஊடகமாக தன்னை எப்போதுமே காட்டிக்கொள்ள மக்கள் தொலைக்காட்சி நிறுவனம் முயன்று வந்திருக்கிறது. மற்ற ஊடகங்களிலிருந்து மாறுபட்ட ஊடகமாக இருப்பதற்காகவே மற்ற ஊடகங்கள் சொல்லாத செய்தியை புனைந்து சொல்லவும் அந்த நிறுவனம் துணிந்திருக்கிறது.

வியாழனன்று (மார்ச் 4) மாலை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பில், “மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் உ.ரா.வரதராசன் கொலையா? திடுக்கிடும் தகவல்: இன்று இரவு 8 மணிக்கு மக்கள் செய்தியில்,” என்பதாக என்று மீண்டும் மீண்டும் அறிவிப்பு ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே பல்வேறு ஊடகங்கள் அவரது மறைவு குறித்த மனசாட்சியற்ற செய்திகளை வெளியிட்டு போதும் போதும் என்கிற அளவிற்கு மக்களைக் குழப்பிவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை.

8 மணிச் செய்தியில் முதல் தகவலாகவே சொல்லப்பட்ட அந்தச் செய்தி, ஒரு ஊடகம் உள்நோக்கத்துடன் எப்படி பல்வேறு காட்சிகளையும், மாறுபட்ட தகவல்களையும் தந்திரமாக இணைத்து ஒரு பொய்ச் செய்தியை உண்மைபோலச் சொல்ல முடியும் என்பதற்கான பாடம் போலவே இருந்தது.

தோழர் உ.ரா.வரதராசன் இறுதி நிகழ்ச்சியையொட்டி பேட்டி அளித்த மத்தியக் குழு உறுப்பினர் என்.வரதராஜன், இது ஒரு படிப்பினை என்று, பொது வாழ்க்கையில் ஈடுபடுவோரின் கட்டுப்பாட்டை வலியுறுத்திப் பேசினார். ஆனால் அதனை ‘மக்கள் செய்தி’, உ.ரா.வரதராசன் உள்கட்சி விவகாரத்தால் கொல்லப்பட்டார் என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறியது.

அதைத் தொடர்ந்து போரூர் ஏரியைக் காட்டியது. புதனன்று (மார்ச் 3) பெண்கள் சந்திப்பு அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் வ.கீதா அளித்த பேட்டியில், உ.ரா.வரதராசன் மீதான கட்சியின் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என கூறியக் காட்சியை இணைத்தது. அதன்பின், சடல ஆய்வு அறிக்கையில் உ.ரா.வரதராசன் கழுத்து நெறித்து கொள்ளப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறியது. வாய் மொழி வார்த்தையாக இப்படியொரு சடல ஆய்வு அறிக்கை பற்றி சொல்லிக் கொண்டே பின்னணியில், உ.ரா.வரதராசன் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிய ஆங்கிலக் கடிதத்தை காட்சிப்படுத்தியது.

ஏற்கெனவே இந்த செய்திகளை பின்பற்றி வருவோருக்கும், ஆங்கிலம் அறிந்தோருக்கும் மட்டுமே அது வரதராசனின் கடிதம் என்பது தெரியும். மற்றவர்களுக்கோ, ஏதோ அதுதான் சடல ஆய்வு அறிக்கை போலும் என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் “நேர்த்தியான” மோசடிக்கு எடுத்துக்காட்டு.

இது மோசடிச் செய்திதான் என்பதை மாநகர காவல்துறையின் மறுப்பு தெளிவுபடுத்திவிட்டது. வியாழனன்று இரவே சில தொலைக்காட்சிகளில் அப்படிப்பட்ட சடல ஆய்வு அறிக்கை எதுவும் வரவில்லை, எந்த ஊடகத்திற்கும் அப்படிப்பட்ட அறிக்கை தரப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது ஒளிபரப்பப்பட்டது. வெள்ளியன்று காலை சில பத்திரிகைகளிலும் இந்த மறுப்பு வெளியானது.

ஒட்டவைக்கப்பட்ட பேட்டி
எழுத்தாளர் வ.கீதாவின் பேட்டியை இந்தச் செய்தியில் இணைத்துக்கொண்டது மற்றொரு மோசடி. இதற்கு அவரே கண்டனம் தெரிவித்து மக்கள் தொலைக்காட்சி செய்தி ஆசிரியருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளார். “மார்ச் 3 அன்று நாங்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளமுடியவில்லை எனக் கூறி உங்கள் நிருபர் தனி பேட்டி வேண்டுமென கேட்டுக்கொண்டார். எனது அலவலகத்திற்கு வரச்சொல்லி பேட்டி அளித்தேன். அதில் நான், இப்பிரச்சனையில் சிபிஎம் முறையான விசாரணை நடத்தவில்லை என்பதைத்தான் சொன்னேன். செய்தியாளர் சந்திப்பில் வழங்கிய அறிக்கையையும் அவருக்குக் கொடுத்தேன். ஆனால், கொலை என்று உள்நோக்கத்துடன் ஒளிபரப்பப்பட்ட உங்கள் செய்தியில் என்னுடைய பேட்டி இணைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் நானே அப்படி ஒரு தகவலை சொன்னதாக ஒரு கருத்து ஏற்படுத்தப்பட்டது. ஊடக அறம் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது. தாங்கள் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்று குறிபிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இரவு 10 மணி ஒளிபரப்பில், அந்தச் செய்தி நிறுத்தப்படும் என நிறுவனம் உறுதியளித்ததாகத் தெரிகிறது. ஆனால் மீண்டும் அந்த திட்டமிட்ட பொய்ச் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு வாக்குறுதி மீரப்பட்டதால் இரண்டாவது மின்னஞ்சல் அனுப்பிய கீதா, ‘மக்கள் தொலைக்காட்சியை ஒரு மாறுபட்ட ஊடகம் என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லை என்பது தெரியவருகிறது. எனது பேட்டியை தவறாக பயன்படுத்தியதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்,” என்று கீதா கூறியிருக்கிறார்.

ஒரு தலைவர் வேறொரு கண்ணோட்டத்தில் சொன்ன கருத்தை திரித்துக்கூறியது, ஒரு எழுத்தாளரின் கருத்தை தவராகப் பயன்படுத்தியது, வராத ஒரு சடல ஆய்வு அறிக்கை பற்றி கூறிக்கொண்டே அதன் பின்னணியில் கடிதவாசகங்களைக் காட்டியது என நூற்றுக்கு நூறு மோசடியாகவே அந்தச் செய்தி தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பொய்மைகளால் ஊடகத்தை நடத்திச் செல்ல வேண்டிய கட்டாயம் மக்கள் தொலைக்காட்சிக்கு ஏன் வந்தது? இதில் உள்நோக்கம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது பொருத்தமான பதிலாகத் தெரிகிறது.

Friday 5 March 2010

இயக்கமே வெல்லும்


‘வெளி’ தேடி புறப்பட்டவர்கள்

“உ.ரா. வரதராசன் மரணம் குறித்த சமூக அக்கறையுள்ள குடிமக்கள், பெண்ணியவாதிகள் விடுக்கும் அறிக்கை” என்ற தகவலுடன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது இதுவரை பல்வேறு ஊடகங்களும், சில தனி மனிதர்களும் பொழிந்த குற்றச்சாட்டுகளையே ஒரே தொகுப்பாகக் கூறியிருந்தார்கள். (இந்த அறிக்கையைத்தான் தினமணி 4-3-2010 இதழில் எஸ்.வி. ராஜதுரை தனது சொற்களில் கட்டுரையாக்கியிருக்கிறார்.) மார்க்சிஸ்ட் கட்சி “தங்களுடைய செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்கிற அளவிற்கு, கட்சிதான் அவரது மறைவுக்குக் காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற அவர்கள் “நாங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் நண்பர்கள்தான்,” என்று வேறு சொல்லிக்கொண்டது வேடிக்கைதான்.

‘பெண்கள் சந்திப்பு’ என்ற அமைப்பின் சார்பில் புதனன்று (மார்ச் 3) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அந்த செய்தியாளர் சந்திப்புக்கு செய்யப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் சார்பில் பேசிய எழுத்தாளர் வ. கீதா, நாடக இயக்குநர் பேராசிரியர் மங்கை, பத்திரிகையாளர் ரேவதி ஆகியோர் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றும், பாலியல் பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் சொல்லிக்கொண்டே போனார்கள். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த செய்தியாளர்கள் “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்களுடைய குற்றச்சாட்டு என்ன? உங்களுடைய கோரிக்கை என்ன,” கேட்க வேண்டியதாயிற்று.

இக்கேள்விகளுக்கான பதில்களாக அவர்கள் சொன்னவற்றின் சாராம்சம் தோழர் உ.ரா.வ. மீதான புகார் குறித்து கட்சிக்குள் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்பதுதான். பாலியல் புகார்கள் தொடர்பான விசாரணைக்கு உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதாகவும் கூறினார்கள். அதற்கு என்ன ஆதாரம் என்று நிருபர்கள் கேட்டபோது மறுபடியும், சில ஏடுகளில் வெளியானவற்றையே மேற்கோள் காட்டினார்கள்.

கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே என்று கேட்டபோது, அந்த அறிக்கை முழுமையாக இல்லை என்று பதுங்கினார்கள். சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறிய அவர்கள், “சம்பந்தப்பட்டவர்களிடம் நீங்கள் இது குறித்துப் பேசினீர்களா,” என்று கேட்டபோது “இல்லை,” என்றார்கள்! கட்சித் தலைவர்களிடமாவது பேச முயன்றீர்களா என்று கேட்டபோது அதற்கும் இல்லை என்ற பதிலையே சொன்னார்கள்!

யாருடனும் பேசாமல், ஏற்கெனவே வெளியான கடிதத்தின் வாசகங்களை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு இயக்கத்தின் மீது பெரிய குற்றச்சாட்டுகளை வீசுவது முறைதானா என்ற கேள்வியும் செய்தியாளர்களிடமிருந்து வந்தது.
பெண்ணியம் குறித்த விவாதத்திற்கான “வெளி” மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இல்லை, பாலியல் பிரச்சனைகள் தொடர்பான சரியான “புரிதல்” கட்சிக்குள் இல்லை என்பதாகவும் சொன்னார்கள். பெண்ணியம், பாலியல் பிரச்சனைகள், பாலியல் அரசியல் ஆகியவை குறித்த ஒரு ஆரோக்கியமான விவாதம் சமதாய வெளியில் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறினார்கள்.

அப்படிப்பட்ட பொது விவாதம் நடத்துவதுதான் நோக்கமா அல்லது மார்க்சிஸ்ட் கட்சியின் மீது குற்றம் சாட்டுவது நோக்கமா என்ற கேள்விக்கு இரண்டுமே தங்களுடைய நோக்கம்தான் என்றார்கள். அப்படியானால் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்: “தெரியாது.”
தெரியாத ஒன்றைப் பற்றி எதற்காக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று கேள்வி வந்தபோது, இப்பிரச்சனைகள் தொடர்பாகப் பொது விவாதத்திற்கு வேண்டுகோள் விடுப்பதே நோக்கம் என்றார்கள். பெண்ணியம், பாலியல் புரிதல்கள் தொடர்பாக ஆரோக்கியமான பொது வெளி விவாதங்கள் நடத்துவது நோக்கம் என்றால், நேரடியாக அதை உங்கள் அமைப்பின் சார்பில் கருத்தரங்கமாக நடத்தியிருக்கலாம், நீங்களே அந்த விவாதத்தை தொடங்கி வைத்திருக்கலாம், அந்தக் கருத்தரங்கில் இதைப்பற்றியும் பேசலாம், அதைவிட்டு விட்டு தோழர் உ.ரா.வ. மரணத்தைப் பயன்படுத்திக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மீது தாக்குதல் தொடுக்கிறவர்களோடு நீங்களும் சேர்ந்து கொண்டது ஏன் என்ற கேள்விக்கு, ஊடகங்களின் அவரது கடிதம் வந்ததால்தான் என்பதாக ஏதேதோ சொன்னார்கள்.

எளிய மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்கள், “நீங்கள் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள், மார்க்சிஸ்ட் கட்சி ஒரு மறு விசாரணை நடத்த வேண்டும் என்கிறீர்களா, சட்டப்பூர்வமாகவே அக்கட்சி நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்கிறீர்களா,” என்று நேரடியாகக் கேட்டனர்.

“அதெல்லாம் எங்களுடைய நோக்கம் அல்ல. நாங்கள் மார்க்சிஸ்ட் கட்சியை மோதலுக்கு அழைக்கவில்லை. ஒரு விவாதத்திற்கு வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம்,” என்றார்கள்.

“எதைப்பற்றி விவாதம் நடத்த அழைக்கிறீர்கள்?”

“பெண்ணியம் பற்றி. பாலியல் அரசியல் பற்றி.”

இதுதான் அவர்களது கடைசி பதில். பெண்ணியம் என்றால் என்ன? பாலின சமத்துவம், பெண்ணின் சம உரிமைகள், பெண்ணுக்கான சம இடங்கள், பெண்ணின் சுயத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் என்பதாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சி புரிந்து கொள்கிறது. இன்று பெண்ணுரிமை தொடர்பான சட்டங்கள், பொது இடங்களில் பெண் நீதிக்கான நடவடிக்கைகள் என்றெல்லாம் ஓரளவிற்காவது வந்திருக்கிறது என்றால் அதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தலையாய பங்கு இருக்கிறது என்பதை மனசாட்சி உள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

பாலியல் அரசியல் என்று எதைச் சொல்ல வருகிறார்கள்? கட்டற்ற பாலியல் உறவுக்கான சுதந்திரத்தை சொல்கிறார்களா, பாலியல் புகார்கள் குறித்து கண்டுகொள்ளக் கூடாது என்கிறார்களா -அவர்களுக்கே வெளிச்சம். எதைப்பற்றியும் அவர்களுக்கென ஒரு பார்வை கொள்வதற்கும், அதைப் பொது வெளியில் விவாதத்திற்கு வைப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.

இதைச் சொல்கிறபோது 3-3-2010 ‘ஜூனியர் விகடன்’ இதழில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுதியுள்ள ‘கல்யாணம் குடும்பம் கம்யூனிஸ்ட்’ என்ற கட்டுரை கண்ணில் படுகிறது. சோசலிச நாடுகளில் பாலியல் உறவுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்யாவில் அலெக்சாந்த்ரா கொலந்தாய் என்ற பெண்மணி, “பொதுவுடைமை சமூகத்தில் பாலியல் விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்வதென்பது ஒரு டம்ளரில் இருக்கும் நீரைக் குடிப்பது போல சாதாரணமான விஷயமாக இருக்கும்,” என்ற வாசகம் புகழ்பெற்றிருந்ததாக எழுதியுள்ளார். அந்த விவாதத்தின்போது லெனின் என்ன சொன்னார் என்பதைப் பதிவு செய்வது இங்கே பொருத்தமாக இருக்கும்:

“பிரபலமாகிவிட்ட இந்த கோப்பைத் தண்ணீர் தத்துவத்தை நான் எவ்வகையிலும் மார்க்சியத் தத்துவமாகக் கருதவில்லை என்பது மட்டுமல்ல, இதை சமூக விரோதத் தத்துவமாகவே கருதுகிறேன். பாலுறவுகளில் காணக்கிடப்பது இயற்கையின் பாத்திரம் மட்டுமல்ல. பண்பாடு காரணமாய்த் தோன்றும் ஓர் உடன் கலப்பும் உள்ளது. சாதாரண பாலுணர்ச்சி வேட்கை தனிப்பட்ட ஒருவர் மீதான பாலுணர்ச்சி வயப்பட்ட காதலாக மலர்ந்து பண்பாட்டு நயம் பெற்றதன் முக்கியத்துவத்தை எங்கல்ஸ் ‘குடும்பத்தின் தோற்றம்’ என்ற தனது நூலில் எடுத்துச் சொல்லியுள்ளார். தண்ணீர் குடிப்பது தனிப்பட்ட ஒருவரது விவகாரம். காதலில் இருவர் பங்கு கொள்கிறார்கள். மூன்றாவது ஜீவன் ஒன்றும் உதிக்கிறது. ஆகவே இது சமுதாய நலன் சம்பந்தப்பட்டதாகிவிடுகிறது,” என்று லெனின் குறிப்பிட்டிருக்கிறார்.

உ.ரா.வ. பிரச்சனையில் சம்பந்தப்பட்ட யாரையும் சந்திப்பதற்கு முயலாமலே கட்சியை விமர்சிக்கப் புறப்பட்ட ‘பெண்கள் சந்திப்பு’ அமைப்பினர் இப்படிப்பட்ட வாதத்தைத்தான் கிளப்புகிறார்கள் என்று கொச்சைப்படுத்துவதற்கில்லை. ஆனால் அறிவுத் தளத்தில் விவாதம் நடத்துவதே நோக்கம் என்பதாகக் கூறிக் கொண்டு இவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது தனிப்பட்ட முறையில் அவதூறு செய்தததும் உண்மைக்கு மாறான சில தகவல்களை தங்களது அறிக்கையில் பதிவு செய்திருப்பதும் இந்த இயக்கத்தைத் தனிப்படுத்த வேண்டும் என்கிற அரசியல் குதர்க்கத்தையே வெளிப்படுகிறது. ஒன்று உறுதி: இதிலேயும் இயக்கமே வெல்லும்.

-அ. குமரேசன்