Sunday 11 November 2007

மனித சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை மூளையின் வளர்ச்சி என்றால் அந்த மூளையின் வளர்ச்சிக்கு ஆதாரம் கைகள். இது பரிணாம வரலாறு. இந்த வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்களோ? இளம் தொழிலாளர்களின் விரல்கள் வெட்டுப்பட்ட கைகளைக் காணும்போது இந்தச் சிந்தனைதான் ஏற்படுகிறது.

தமிழகத்தின் முக்கியத் தொழிற்பேட்டை நகரங்களில் ஒன்று ஹோசூர். அதன் சிறு/குறு தொழிற்சாலைகளில் எந்திர இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள் அவர்கள். உலோகப் பாளங்களையும் தகடுகளையும் பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றிய அவர்களது கைகள், நொடிப்பொழுது விபத்தில் எந்திரங்களின் பசிக்கு விரல்களைத் தின்னக் கொடுத்துவிட்டு இப்போது இதழ்கள் பறிக்கப்பட்ட பூக்களாய்க் காட்சியளிக்கின்றன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திரை இயக்க முயற்சியின் மற்றுமொரு படைப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டக் குழுவினரின் முனைப்பில் வந்திருக்கும் “விரல்கள்” குறும்படம், அந்தத் தொழிலாளர்களின் விரல்கள் வெட்டப்பட்ட கதையைத் தேடிச் சொல்கிறது. தனிப்பட்ட சில தொழிலாளர்களின் வேதனை, தொழிற்சாலைகளின் நிலைமை ஆகியவற்றோடு மட்டும் நிறுத்தியிருந்தால் இது சாதாரணமானதொரு தகவல் தொகுப்பாகியிருக்கும். ஆனால் இந்தப்படம், இத்தகைய நிலைமைகளின் அரசியல் - சமூக - பொருளாதாரப் பின்னணிகளையும் நம் முன் வைக்கிறது. அதனால், இது ஒரு முக்கியமான ஆவணப்பதிவாகியிருக்கிறது.

கிராமங்களில் வேலைவாய்ப்பின்றி, நகரத்தில் வேலைகள் கொட்டிக் கிடப்பதாக நினைத்துக் கொண்டு, நன்றாகச் சம்பாதிக்க லாம், வசதியாக வாழலாம் என்ற கனவுகளோடு வந்த இளைஞர்கள் இவர்கள். வந்த இடத்தில் வேலை கிடைக்கிறது - ஆபத்தான, அற்பச் சம்பளத்துக்கான வேலைகள். இரும்பென்றும் எலும்பென்றும் பார்க்காத அந்த எந்திரங்களின் வாய்களுக்குள், இத்தொழிலாளர்களின் கைகள் அந்த எந்திரங்களின் நீண்ட கரங்களுக்குப் போட்டியாகச் சென்றுவரும் வேகம், படமாகப் பார்க்கிற நமக்கே பதைப்பை ஏற்படுத்துகிறது. இன்றைய அவுட்சோர்சிங் யுகத்தில், உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களும் அந்நியப் பன்னாட்டு நிறுவனங்களும் இப்படிப்பட்ட வேலைகளை இப்படிப்பட்ட சிறு/குறு நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் தள்ளிவிடுகின்றன. உலகம் முழுவதும் விற்பனைச் சந்தையைப் பிடித்துவைத்துள்ள அந்த நிறுவனங்களின் நிர்வாகங்களுடன், இந்த உள்ளூர்த் தொழிலாளர்கள் எவ்விதத் தொடர்புமற்றவர்களாக இழப்பீடுகளோ, உதவிகளோ பெற முடியாது.

மேற்படி பெரிய நிறுவனங்கள் இந்த சிறு/குறு தொழிலகங்களிடமிருந்து, தாங்கள் நிர்ணயித்த தரம் வருகிறதா என்று மட்டும்தான் பார்க்கின் றனவேயன்றி, தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி கண்டுகொள்வதில்லை என்பதை எடுத்துக் கூறுகிறது இக்குறும்படம். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தானே, சொந்த ஆலைகளில் இப்பொருள்களைத் தயார் செய்யாமல் “அவுட் சோர்சிங்” விடுவதே! அந்தப் பெரிய நிறுவனங்களின் விற்றுவரவு-லாபம் குறித்துக் கூறும் கணினி வரைபடங்களின் அம்புக்குறிகள், இப்படிப் பட்ட குரல் மறுக்கப்பட்ட தொழிலாளர்களின் மார்புகளில் பாய்ந்த அம்புகளாகவே தெரிகின்றன.

சிஐடியு செயலாளர் ஜி. சேகர் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர் கள் சுரண்டல் நிலைமைகளை எடுத்துக்கூறுகிறார்கள். முற்போக்கு இலக்கிய மேடைகளில் தாமே பாடல்கள் இயற்றிப் பாடவல்லவராக அறிமுகமான வையம்பட்டி முத்துசாமி, தாம் வேலை செய்த ஏற்றுமதி நிறுவனம் மூடப்பட்டதால், தற்போது ஒரு டீ கடை நடத்துகிறார். அவரது குரலில் ஒலிக்கும் பாடல் சோகத்தை இறக்குமதி செய்கிறது.

எது நடந்தாலும் கேட்க முடியாதவர்களாக, சில தொழில் வளாகங்களில் பெண்கள் கொத்தடிமைகள் போல் வைக்கப்பட்டுள்ள கொடுமையை, ஏற்கெனவே எழுத்தில் பதிவு செய்த ‘தீக்கதிர்’ நிருபர் முருகேசன் இதில் தமது குரலில் வெளிப்படுத்துகிறார்.

சில உரையாடல்களின் நீளத்தைச் சுருக்கி, சில பேட்டிகள் திரும்பத்திரும்ப வருவதைத் தவிர்த்திருந்தால் படம் மேலும் கச்சிதமாக அமையும்.

ஹோசூர் படப்பிடிப்பு தனியொரு ஊரின் பிரச்சனை அல்ல. இப்படிப்பட்ட தொழிற்சாலைகளும், ஆபத்தான சூழல்களும் நிறைந்த எல்லாப் பகுதிகளுக்குமான பொதுச் செய்தி இப்படத்தில் இருக்கிறது. பொது இடங்களில் இவ்வாறு விரல்களற்ற கைகளோடு சிலர் நம்மருகில் அமர்ந்திருக்கக்கூடும். அவர்களின் தோற்றத்தைப் பார்த்து சிலருக்குப் பரிதாபம் ஏற்படும்; சிலருக்கு அருவருப்பும் கூட ஏற்படும். உண்மையாக ஏற்பட வேண்டியது வெஞ்சினம். மாற்றத்தை விளைவிக்கும் அந்த வெஞ்சினத்தை விதைக்கும் படைப்பை வழங்கியிருக்கிறார்கள் தயாரித்து இயக்கியுள்ள நி. கோபால், ஆ. சுபாஷ், இரா. தமிழ்ச்செல்வம் ஆகியோர். படத்தொகுப்பாளர் அ. மார்கன், சில சிறப்புக் காட்சிகளையும் இணைத்து படத்திற்கு ஒரு ஆழம் சேர்த்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் இந்த விரல்கள் விரிய வேண்டும். படத்தில் வானை நோக்கி விரியும் பட்டுப் போன ஒரு மரத்தின் கிளைகள் அதைத்தான் வேண்டுகின்றன.

No comments: